மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பல தசாப்தங்களாக ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரம் காட்டி வருகின்றன. ஈரானின் அணு உலைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் மூலமாக அந்த நாட்டின் யுரேனியம் செறிவூட்டும் திறனை ஓரளவு சிதைப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், இந்தப் போர் அமெரிக்காவிற்கு ஒரு கசப்பான உண்மையை உணர்த்தியுள்ளது. ஈரானிடம் அணு குண்டுகள் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒரு “இயற்கை அணு ஆயுதத்தை” ஈரான் ஏற்கனவே கையில் வைத்திருக்கிறது. அதுதான் உலக நாடுகளின் எரிசக்தி உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தி.
ஏவுகணைகள் மூலம் நடத்தப்படும் அணு ஆயுதத் தாக்குதல் என்பது உயிர்ச்சேதங்களையும், கதிர்வீச்சுப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு “பொருளாதார அணு ஆயுதமாக” ஈரான் பயன்படுத்துகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்தப் குறுகிய கடல் பாதை வழியாகத்தான் நடக்கிறது. இந்தப் பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம், ஒரு துப்பாக்கி குண்டைக் கூட ஏவாமல் உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய முடியும்.
சில சரக்குக் கப்பல்களை எச்சரிப்பது அல்லது சிறிய தாக்குதல்களை நடத்துவதன் மூலம், சர்வதேசக் காப்பீட்டுத் தொகையை எகிறச் செய்து, கச்சா எண்ணெய் விலையை ஒரு பேரலுக்கு 110 டாலர் என்ற ஆபத்தான நிலைக்கு ஈரான் கொண்டு சென்றுள்ளது. இது நவீன வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது போர் வியூகத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளார். வான்வழித் தாக்குதல்களை விட, ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே இப்போது அமெரிக்காவின் பிரதான இலக்காக மாறியுள்ளது. இதற்காகவே அரபிக் கடல் முதல் ஜலசந்தி வரை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஒரு பலமான இரும்புத் திரையை அமைத்துள்ளன.
இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதோடு, எதிர்காலத்தில் “சுங்கக் கட்டணம்” (Toll) வசூலிக்கும் எண்ணமும் ட்ரம்ப்பிற்கு இருப்பதாகத் தெரிகிறது. இது சர்வதேசக் கடல் எல்லைகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த “ஜலசந்தி ஆயுதத்தை” எதிர்கொள்வது அமெரிக்காவிற்கு ஒரு நீண்டகாலச் சவாலாகும். இது வெறும் சில வாரங்களில் முடியப்போகும் போர் அல்ல; மாறாக அடுத்த பல தசாப்தங்களுக்கு நீடிக்கக்கூடிய ஒரு ராஜதந்திர மோதல். இதற்காக அமெரிக்கா தனது விமானந்தாங்கி போர்க்கப்பல்களை இந்தப் பிராந்தியத்தில் நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, புதிய எண்ணெய் குழாய் வழித்தடங்களை உருவாக்கவும், மாற்று எரிசக்தித் திட்டங்களை வகுக்கவும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. ஈரானின் இந்த இயற்கை ஆயுதத்தை அமெரிக்கா எப்படி முறியடிக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
