ரெயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஓய்வு பெறும் போது, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் வழங்குவது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நடைமுறை இனிமேல் தொடராது என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மண்டல ரெயில்வே நிர்வாகங்களுக்கும் ரெயில்வே அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “தற்போது நடைமுறையில் உள்ள வெள்ளிப் பதக்கம் வழங்கும் முறை இத்துடன் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ள வெள்ளிப் பதக்கங்கள், பயனுள்ள பிற பணிகள் அல்லது செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளதால் செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், சில ஒப்பந்ததாரர்கள் தரமற்ற அல்லது விதிமுறைகளுக்கு உட்படாத வெள்ளிப் பதக்கங்களை வழங்கியதாக எழுந்த புகார்களினாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
