அமெரிக்காவில் பணிபுரியும் மற்றும் கல்வி கற்கும் இந்தியர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, புளோரிடா மாகாணம், தனது மாநிலப் பல்கலைக்கழகங்களில் H-1B விசாக்களின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முதலிடம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆளுநர் ரான் டிசாண்டிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இது அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டம்பாவில் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆளுநர் டிசாண்டிஸ், வெளிநாட்டு ஊழியர்களை விட, உள்ளூர் திறமையாளர்களுக்கே மாநிலப் பல்கலைக்கழகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
H-1B விசா திட்டம், “மலிவான தொழிலாளர்களை” (Cheap Labor) பெறுவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கடுமையாகச் சாடிய அவர், பல்கலைக்கழகத் தலைவர்கள் தங்களது பணியமர்த்தல் நடைமுறைகளை முழுமையாக மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட மாநில ஆய்வில், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தடகளத் துறை ஊழியர்கள் போன்ற பல பதவிகளில் H-1B விசா மூலம் வெளிநாட்டினர் பணியமர்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதைக் குறிப்பிட்ட ஆளுநர், “இந்தப் பதவிகளுக்குத் தேவையான சிறப்புத் திறன்கள் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடம் இல்லையா? நம் சொந்த மக்களை வைத்து இதைச் செய்ய முடியாதா? ஏன் வெளிநாட்டிலிருந்து ஆட்களைக் கொண்டுவர வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
புளோரிடாவின் இந்த முடிவு, அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினரை நேரடியாகப் பாதிக்கும். ஏனெனில், அமெரிக்கா வழங்கும் H-1B விசாக்களால் ஆண்டுதோறும் அதிக அளவில் பயனடைவது இந்தியர்கள்தான். இந்தத் தடை, புளோரிடா பல்கலைக்கழகங்களில் தற்போது பணிபுரியும் அல்லது எதிர்காலத்தில் பணிபுரிய விரும்பும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களின் அமெரிக்கக் கனவைப் பாதிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
புளோரிடாவின் இந்த புதிய தடை அறிவிப்பு, அமெரிக்காவில் விசா விதிகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது. சமீபத்தில் அமெரிக்க அரசு, H-1B விசா விண்ணப்பக் கட்டணத்தை ஒரு மனுவிற்கு 100,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்தியதாக வெளியான செய்திகளும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகின்றன. இது, திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கதவுகள் அமெரிக்காவில் மெல்ல மெல்ல சுருங்கி வருவதற்கான ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
