சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தன் காரில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதாக நிகிதா என்ற பெண் அளித்த புகார் தொடர்பாக அஜித்குமாரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, மானாமதுரை தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.