வாட்ஸ்அப்பில் புது அப்டேட்!! இனிமேல் நண்பர்களின் பிறந்தநாளை மறக்க மாட்டிங்க !! எப்படித் தெரியுமா?

வாட்ஸ்அப் தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது கான்டாக்ட்களில் உள்ளவர்களின் பிறந்தநாளை நினைவூட்டும் புதிய வசதியை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் மூலம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பிறந்தநாளை மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பது மேலும் எளிதாகும்.

முன்னதாக சில பயனர்களிடம் வாட்ஸ்அப் பிறந்த தேதி விவரங்களை சேகரிக்கத் தொடங்கியது. இந்த தகவல் சட்டரீதியான தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மற்ற பயனர்களுடன் பகிரப்படாது என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது அந்த தகவலை பிறந்தநாள் நினைவூட்டல் அம்சத்திற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு பீட்டா 2.26.27.3 பதிப்பில் இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. ‘Birthdays’ என்ற புதிய பிரிவின் மூலம் வரவிருக்கும் பிறந்தநாள்களின் பட்டியலை பயனர்கள் பார்க்க முடியும்.

மேலும், ஒரு கான்டாக்ட்டின் பிறந்தநாள் நெருங்கும் போது, வாட்ஸ்அப் செயலிக்குள்ளேயே நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். இதனால் தனியாக காலண்டர் செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த வசதி, ஒரு பயனர் தனது பிறந்த தேதியை வாட்ஸ்அப்பில் பகிர்ந்திருந்தால் மட்டுமே செயல்படும்.

மேலும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட நபர்களிடமிருந்து பிறந்தநாளை மறைக்கும் தனியுரிமை (Privacy) வசதியும் இதில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த அம்சம் உருவாக்கத்தில் இருப்பதால், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

Related News

Latest News