ஈரான் களமிறக்கும் ‘புதிய ஆயுதங்கள்’?அமெரிக்காவுக்கு விழப்போகும் ‘மரண அடி’!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மிரட்டல்களுக்குப் பணிந்து ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கூறிய அவர், கடந்த இரண்டு வார காலப் போர்நிறுத்த இடைவெளியைப் பயன்படுத்தி, போர்க்களத்தில் இறக்குவதற்கு “புதிய துருப்புச் சீட்டுகளை” (New Cards) ஈரான் தயார் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது நவீன ரக ஏவுகணைகளா அல்லது புதிய ராணுவ வியூகங்களா என்ற அச்சம் இப்போது உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான ஆக்ரோஷமான பாணியில் ஈரானுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ஈரானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தனக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், தான் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஒபாமா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை விட, மிகவும் கடுமையான மற்றும் அமெரிக்காவிற்குச் சாதகமான ஒரு புதிய ஒப்பந்தத்தை மட்டுமே தான் ஏற்றுக் கொள்வேன் என்று ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினர் ஈரானிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்ததாகக் குற்றம் சாட்டிய அவர், ஈரான் மீதான தனது பிடி இன்னும் தளரவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நடுக்கடலில் ஈரானியச் சரக்குக் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்த சம்பவம், நிலவி வரும் தற்காலிகப் போர்நிறுத்தத்தில் ஒரு மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப் போவதாக ஈரான் சூளுரைத்துள்ள நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வேண்டிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் இப்போது கேள்விக்குறியாகியுள்ளன.

ஒருபுறம் அமைதிக்குத் தயார் என்று ஈரான் கூறினாலும், மறுபுறம் ட்ரம்ப் விடுத்து வரும் மிரட்டல்கள் மற்றும் குண்டுவீச்சு எச்சரிக்கைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் போர்நிறுத்தக் காலம் முடியவுள்ள சூழலில், மத்திய கிழக்கில் மீண்டும் குண்டுமழை பொழியுமா அல்லது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமா என்பதை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News