Saturday, December 20, 2025

ஜல்லிக்கட்டுக்கு புதிய கட்டுப்பாடு., மீறினால் அனுமதி கட்.!

“சீறி வரும் காளைகள்… திமிறும் காளையர்கள்!” தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டாலே, நம் அனைவரின் நினைவிற்கும் வருவது அந்தப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் எனத் தென் மாவட்டங்கள் முழுவதும் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் சற்றே கூடுதல் கெடுபிடிகள் இருக்கப்போகிறது. ஆம், ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடியான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் சுப்பையன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சில முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இனி மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல், தமிழ்நாட்டின் எந்த ஒரு மூலையிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு அல்லது வடமாடு என எந்தப் போட்டியையும் நடத்தவே கூடாது. அதுமட்டுமல்ல, போட்டியை நடத்த விரும்புபவர்கள் இனி நேரில் சென்று மனு கொடுக்கத் தேவையில்லை, விண்ணப்பங்கள் அனைத்தும் “ஆன்லைன்” மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற புதிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போதே, காளைகளுக்கும், வீரர்களுக்கும் காப்பீடு செய்ததற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேபோல, பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடந்து வரும் இடங்களைத் தவிர்த்து, புதிதாக ஜல்லிக்கட்டுக்குத் தொடர்பில்லாத இடங்களில் போட்டிகளை நடத்த அனுமதி கேட்டால், அந்த விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின்படி, போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்குச் சிறு காயம் கூட ஏற்படக்கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக உள்ளது. போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில், கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவைப்படும் காளைகளுக்கு அங்கேயே உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

அதேபோல, வாடிவாசல் வழியாகக் காளைகள் சீறி வரும் அந்தப் போட்டி நடைபெறும் களத்திற்குள், பார்வையாளர்களோ, வெளியாட்களோ அல்லது வீரர்கள் அல்லாத வேறு யாருமே இருக்கக் கூடாது. இதை உறுதி செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் காவல்துறையைச் சாரும். ஜல்லிக்கட்டு மட்டுமல்லாது வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா என அனைத்து வீர விளையாட்டுகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.

Related News

Latest News