தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி. இவர் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன் மூலம் எப்எம் வைத்து பாட்டு கேட்டு பொழுதைக் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அவரது ரேடியோவை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி தனது ரேடியோ பெட்டியைக் கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு ரேடியோ பெட்டியில் பாட்டு கேட்காமல் ஏதோ இழந்தது போன்று இருப்பதாக மூதாட்டி தெரிவித்தார்.
இந்நிலையில் ஹலோ எப்.எம். சார்பில் ஆதிலட்சுமிக்கு நேற்று புதிய ரேடியோ வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.
