மே 1 முதல் புதிய எல்பிஜி சிலிண்டர் விதிகள்! முன்பதிவில் அதிரடி மாற்றம்! அலர்ட் மக்களே!

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் இந்திய இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல், கேஸ் சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோக முறையில் மத்திய அரசு சில அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அமலில் உள்ள விதிகளின்படி, நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டருக்கு 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் நீடிக்கிறது. இந்த நிலையில், மே மாதம் முதல் அமலுக்கு வரப்போகும் புதிய விதிகளால் விநியோக முறையில் இன்னும் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மிக முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுவது, ஒடிபி (OTP) அடிப்படையிலான விநியோக முறையாகும். இனி உங்கள் வீட்டிற்குச் சிலிண்டர் வரும்போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ரகசியக் குறியீட்டைச் சொன்னால் மட்டுமே ஊழியர்கள் சிலிண்டரை ஒப்படைப்பார்கள். இது கறுப்புச் சந்தையில் சிலிண்டர்கள் விற்கப்படுவதைத் தடுக்க உதவும். அதேபோல், ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) பணிகளை முடிக்காதவர்களுக்குச் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் சுமார் 928 ரூபாய்க்கும், வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டர் 2,246 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போர்ச் சூழலால் விலையில் பெரிய மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு மத்தியில், தற்போதைக்கு விநியோகத்தை முறைப்படுத்துவதிலேயே எண்ணெய் நிறுவனங்கள் குறியாக உள்ளன.

சர்வதேச அளவில் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையிடப்பட்டுள்ளதால், இந்தியாவிற்கு வரும் எரிவாயு கப்பல்கள் கடும் சவால்களைச் சந்தித்தன. இருப்பினும், இந்திய அரசு மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டு அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து கூடுதல் எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. சுமார் 8 லட்சம் டன் எரிவாயு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியாவிற்கு வந்து சேரவுள்ளது.

சமீபத்தில் 10 பிரம்மாண்ட கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியத் துறைமுகங்களை வந்தடைந்துள்ளதால், சிலிண்டர் தட்டுப்பாடு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியையும் 20 சதவீதம் வரை அரசு உயர்த்தியுள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும், மே முதல் மாறப்போகும் இந்த புதிய விதிமுறைகளை அறிந்து அதற்கேற்பத் திட்டமிடுவது அவசியமாகும்.

Related News

Latest News