ஊழியர்களின் பிஎப் கணக்கை நிர்வகிக்கும் ஈபிஎஃப்ஓ, பணத்தை வித்டிரா செய்வதற்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வேலை இழப்பு, மருத்துவச் செலவு, கல்வி, திருமணம், வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட தேவைகளுக்காக பிஎப் தொகையை எடுப்பது எளிதாகியுள்ளது.
முன்னதாக இருந்த 13 விதமான காரணங்கள், தற்போது ‘அடிப்படைத் தேவை’, ‘வீடு தொடர்பான விவகாரங்கள்’, ‘தனிப்பட்ட சூழ்நிலைகள்’ என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பணத்தை வித்டிரா செய்வதற்கான குறைந்தபட்ச பணி காலம் 36 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
கல்வி தேவைக்காக ஒருவரின் பணிக்காலத்தில் அதிகபட்சம் 10 முறையும், திருமணத்திற்காக 5 முறையும் பணம் எடுக்கலாம்.
அதேசமயம், பெரும்பாலான காரணங்களுக்காக பிஎப் கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும். மீதமுள்ள 25 சதவீதம் கணக்கில் தொடர்ந்து இருக்கும்.
மேலும், முன்பு ஊழியர் செலுத்திய பங்களிப்பு மற்றும் அதற்கான வட்டி மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது நிறுவனத்தின் பங்களிப்பும் வித்டிரா செய்யக்கூடிய தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
வேலை இழந்தால் முதற்கட்டமாக 75 சதவீத தொகையை எடுக்கலாம். மீதமுள்ள 25 சதவீதத்தை 12 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்த பிறகு பெற முடியும்.
இந்த மாற்றங்கள் அவசரத் தேவைகளில் ஊழியர்களுக்கு கூடுதல் நிதி வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
