ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வங்கிகள் சில புதிய விதிமுறைகள் அல்லது மாற்றங்களை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக புதிய நிதியாண்டு தொடங்கும் இந்த காலத்தில், HDFC Bank, Punjab National Bank மற்றும் Bandhan Bank ஆகிய வங்கிகள் ஏடிஎம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பாக முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளன. இந்த மாற்றங்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி தனது ஏடிஎம் பணப் பரிவர்த்தனை விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இதுவரை ஏடிஎம்களில் QR கோடு ஸ்கேன் செய்து யுபிஐ மூலம் பணம் எடுப்பது தனியாக கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் யுபிஐ மூலம் எடுக்கப்படும் பணமும் மாதாந்திர இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பிற்குள் சேர்க்கப்படும். அந்த இலவச வரம்பு முடிந்த பிறகு ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
வழக்கம்போல, ஹெச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத இடங்களில் 5 முறையும் இலவசமாக பயன்படுத்தலாம். இதில் யுபிஐ பரிவர்த்தனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பை குறைத்துள்ளது. ரூபே பிளாட்டினம், விசா கோல்ட், மாஸ்டர்கார்டு பிளாட்டினம் போன்ற கார்டுகளுக்கு இருந்த ரூ.1,00,000 வரம்பு இப்போது ரூ.50,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரூபே செலக்ட் மற்றும் விசா சிக்னேச்சர் போன்ற உயர்தர கார்டுகளுக்கு இருந்த ரூ.1,50,000 வரம்பு இப்போது ரூ.75,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் மோசடிகளை குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.
பந்தன் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் இலவச வரம்புகளில் மாற்றங்களை செய்துள்ளது. பந்தன் வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் இலவசமாக செய்யலாம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசமாக பயன்படுத்தலாம்.
இந்த இலவச வரம்பை மீறினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். பேலன்ஸ் செக் போன்ற நிதியற்ற சேவைகளுக்கு வரம்பை மீறினால் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஏடிஎமில் பணம் எடுக்கும்போது கணக்கில் போதிய இருப்பு இல்லாமல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் ரூ.25 அபராதம் விதிக்கப்படும்.
