Tuesday, July 22, 2025

பயணிகள் கவனத்திற்கு.., சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை பயன்படுத்தலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் ரயிலில் எளிமையாக பயணிக்கும் வகையில் சி.எம்.ஆர்.எல். எனப்படும் பயண அட்டையை முதலில் அறிமுகப்படுத்தியது. அதன்பின், கடந்த 2023 ஆம் ஆண்டு கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. எனவே, 41 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. கியூ ஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

பயணிகள் தங்களது பயண அட்டைகளில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இருப்புத் தொகை குறைந்தபட்சமாக 50 ரூபாயாக இருக்கும்போது, பயண அட்டையை மெட்ரோ ரயில் டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒப்படைத்துவிட்டு, தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news