இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நாற்காலி ஆட்டம் காணத் தொடங்கியிருக்கிறது. அக்டோபர் 7, 2023-ல் ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி, இப்போது இஸ்ரேலின் ராணுவத்துக்கும், அரசியல் தலைமைக்கும் இடையே ஒரு பெரிய பூசலையே உண்டாக்கியிருக்கிறது.
அன்றைய தினம், ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில், 1,221 அப்பாவி இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து இரண்டு வருடங்களாக காஸாவில் போர் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.
இஸ்ரேல் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர், ஹமாஸ் தாக்குதல் தோல்வி குறித்து விசாரிக்க ஒரு சுதந்திரமான விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று கோருகிறார்கள். ஆனால், நெதன்யாகு அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
ஏன் நெதன்யாகு இவ்வளவு பயப்படுகிறார் தெரியுமா? இதேபோல, 1973-ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஒரு விசாரணை ஆணையத்தின் அறிக்கைதான், அப்போதைய பிரதமர் கோல்டா மேயரின் பதவி விலகலுக்கே காரணம். அதே கதி தனக்கும் வந்துவிடுமோ என்று நெதன்யாகு அஞ்சுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான், இஸ்ரேல் ராணுவமே நெதன்யாகுவுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.ராணுவம், தங்கள் தரப்பில் நடந்த தவறுகளை ஒப்புக்கொண்டு, மூன்று தளபதிகளை பணிநீக்கம் செய்துள்ளது. அதுமட்டுமல்ல, ராணுவத்தின் தலைமைத் தளபதி இயால் ஜமீர், “இந்தத் தோல்வி குறித்து ஒரு முழுமையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், நெதன்யாகு விடுவாரா? உடனடியாக, நெதன்யாகுவின் விசுவாசியாகக் கருதப்படும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “ராணுவம் செய்த விசாரணையையே நாங்கள் திரும்பவும் ஒருமுறை ஆய்வு செய்வோம்” என்று அறிவித்திருப்பது, இந்த மோதலை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அரசியல் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், “நெதன்யாகு எப்போதுமே எந்தப் பழிக்கும் பொறுப்பேற்க மாட்டார். ஏனென்றால், தவறை ஒப்புக்கொண்டால், பதவியை விட்டு இறங்க வேண்டும். ஏற்கனவே, இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற பல அதிகாரிகள் அவர்களின் பதவிகளை இழந்துள்ளனர். அதனால்தான், நெதன்யாகு பிடிவாதமாக மறுக்கிறார்.”
அரசு, ஒருபுறம் “சுதந்திரமான விசாரணை” என்று கூறிக்கொண்டே, மறுபுறம் தங்களுக்கு வேண்டிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதை எதிர்த்து, ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ் நகரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
