பீகாரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செப்டம்பர் மாதம் முதலமைச்சர் நிதிஷ் குமார் பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 1 கோடியே 21 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
பீகாரில் உள்ள 3 கோடியே 51 லட்சம் பெண் வாக்காளர்களில் 40% பேர் இந்த திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர். ஏற்கனவே நிதிஷ் குமார் மீது வலுவான ஆதரவு கொண்ட பெண்கள் வாக்காளர்கள், இந்த உதவித் தொகையால் மேலும் N.D.A பக்கம் சாய்ந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, முன்னோர் தேர்தலில் 59.7% மட்டுமே இருந்த பெண்களின் வாக்குப்பதிவு இம்முறை 71.6% ஆக உயர்ந்துள்ளது.
இவை மட்டுமில்லாமல், ஜூலை மாதம் முதல் வீட்டுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பலனடைந்தன. சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.400 இலிருந்து ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் மேலும் 1 கோடியே 11 லட்சம் பேர் உதவியைப் பெற்றுள்ளனர்.
இளைஞர்களை கவர, 25 வயதுக்குட்பட்ட வேலைஇல்லா இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகள் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 7.6 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர உள்ளனர். மாணவர் கடன் அட்டை திட்டத்திலும் வட்டி தள்ளுபடி, கடன் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிப்பு போன்ற மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
சாதி அரசியலில் முக்கிய பிரிவுகளை ஒருங்கிணைக்க, சிராக் பஸ்வான், உபேந்திர குஷ்வாகா, ஜித்தன் ராம் மஞ்சி ஆகியோரின் ஆதரவை N.D.A தக்க வைத்தது. சீமாஞ்சல் பகுதிக்கு வளர்ச்சித் திட்டங்கள், சீதாமர்ஹியில் சீதாதேவி கோயில் வாக்குறுதி போன்றவை கூட்டணிக்கு ஆதரவாக அமைந்தன.
மோடி 16 நாட்களில் 14 பொதுக்கூட்டங்கள், நிதிஷ் குமார் 25 நாட்களில் 181 பொதுக்கூட்டங்கள் நடத்தி அதிரடி பிரசாரம் மேற்கொண்டது N.D.A-வின் பெரும்பாலான வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
