Tuesday, July 1, 2025

இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினம் : உருவானது எப்படி தெரியுமா?

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர். இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார். தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.

இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார். அன்னாரின் மருத்துவ அா்ப்பணிப்பை கொண்டாடும் வகையில் வருடந்தோறும் ஜூலை முதல் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

மருத்துவர்களுக்கு பரந்த அன்பும் சேவை மனப்பான்மையும் மிகவும் அவசியம். கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் அளவிடவே முடியாது. ‘இந்த உலகில் தெய்வமே இல்லை’ என்று வாதிடுபவர்கள்கூட, மருத்துவரின் அளப்பரிய சேவையைக் கண்டு, அவர் வடிவில் தெய்வத்தைக் கண்டதாகக் கூறுவது உண்டு.

தெய்வங்கள் நேரிடையாக பூமிக்கு வருவதில்லை. அன்பும் சேவையும் கருணையும் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ, அந்த மனிதனிடம் இறைவன் வந்து குடிகொள்கிறார். எனவேதான், இவையெல்லாம் கொண்ட நடமாடும் தெய்வங்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மருத்துவர்கள். அவர்களே, ‘மறுபிறவி’ தரும் கடவுள்கள். அந்த வகையில் மனித வாழ்வில் முக்கியமான அம்சங்களான, மாதா ,பிதா, குரு, தெய்வம் என்பதுபோல மருத்துவர்களும் பெரும் பங்களிப்பை மேற்கொண்டு வருவது உலகறிந்த விஷயமே.

அதே சமயம் மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் மருத்துவர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு. ஆம்.. இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது. இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் குறைவாகும்.

அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.

தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news