கடற்கரைக்கு வாக்கிங் போன மக்களுக்கு காத்திருந்தது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி! மணல் முழுக்க நூற்றுக்கணக்கான பழைய காலத்துச் செருப்புகள் சிதறிக் கிடந்தன. அதுவும் சாதாரண செருப்புகள் இல்லை… சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விக்டோரியா மகாராணி காலத்துச் செருப்புகள்!
இந்த விசித்திரமான சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸ் (Wales) பகுதியில் உள்ள ஆக்மோர் (Ogmore) கடற்கரையில் நடந்துள்ளது. அங்கே இருக்கும் பாறைகளுக்கு இடையே உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்ய போன தன்னார்வலர்கள் குழு, இந்த அதிசயத்தைப் பார்த்துள்ளனர்.
ஒன்று இரண்டு இல்லை… கிட்டத்தட்ட 200 காலணிகளை ஒரே வாரத்தில் கண்டெடுத்துள்ளனர். இதில் பெரும்பாலானவை ஆண்களின் பூட்ஸ் மற்றும் மிகச்சிறிய குழந்தைகளின் தோல் காலணிகள். “இதைப் பார்க்கும்போது ஏதோ வேலைக்காரப் பெண்கள் அணிந்த காலணிகள் போலத் தெரிகிறது” என்று எம்மா லம்போர்ட் (Emma Lamport) என்ற ஆய்வாளர் கூறியுள்ளார்.
சரி, இத்தனை பழைய செருப்புகள் திடீரென எப்படிக் கரை ஒதுங்கியது? இதற்குப் பின்னால் ஒரு சோகமான கதை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சுமார் 150 வருஷத்துக்கு முன்னாடி, அந்தப் பகுதியில் ஒரு இத்தாலியக் கப்பல், டஸ்கர் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்ட சரக்குகளில் இந்த லெதர் காலணிகளும் இருந்திருக்கலாம். கப்பல் மூழ்கியபோது, இந்தக் காலணிகள் அனைத்தும் கடலுக்கு அடியில் மண்ணில் புதைந்திருக்கலாம். இப்போது கடல் நீரோட்டம் மாறியதாலோ அல்லது மண் அரிப்பாலோ இவை வெளியே வந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
“ஒரே இடத்தில் இவ்வளவு காலணிகளைப் பார்க்கும்போது எங்களுக்குப் பயமாகவும், அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஒவ்வொன்றுக்கும் பின்னால் என்ன கதை இருக்குமோ?” என்று அந்த ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
