சென்னை ஆழ்வார்பேட்டையில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் திமுகவின் பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பிரச்சாரத்தை திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதல் கட்டமாக 68 ஆயிரத்து 463 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு உதவிட திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில், இரண்டாம் கட்ட பரப்புரையை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு முழுவதும் கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்களை திமுக நடத்த உள்ளது. 68 ஆயிரத்து 463 வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6.8 லட்சம் திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்துதல் மற்றும் அணிதிரட்டுவதை நோக்கமாக இந்த பரப்புரை கொண்டுள்ளது.
வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 440 வாக்குகளை பெற இலக்கு நிர்ணயித்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
