20 விசில் அடிச்சும் மட்டன் வேகவே இல்லை : குக்கருடன் போலீசில் புகார் அளித்த நபர்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தின் தாடிபத்திரி பகுதியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு வசிக்கும் சோதால ஹாஜி என்பவர், ஒரு குக்கருடன் நேரடியாக போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தார். அவரை பார்த்த போலீஸார் காரணம் கேட்டபோது, “நான் ஒரு கடையில் தலைக்கறி வாங்கினேன். அதை குக்கரில் 20 விசில் வைத்தும் வேகவில்லை. அந்த கடைக்காரர் என்னை ஏமாற்றியுள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோபமாக கூறினார்.

இந்த சத்தத்தை கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோஹன ராவ், ஹாஜியை அழைத்து விவரங்களை அமைதியாக கேட்டார்.

ஹாஜி விளக்கமளிக்கையில், “உகாதி பண்டிகைக்கு பிறகு எங்கள் வீட்டில் கறி விருந்து சாப்பிடுவது வழக்கம். அதற்காக தாடிபத்திரியில் உள்ள ஒரு கடையில் தலைக்கறி வாங்கினேன். ஆனால் 20 விசில் வைத்தும் அது வேகவில்லை. அதனால் அது உண்மையில் தலைக்கறிதானா அல்லது வேறு ஏதாவது தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் தான் புகார் அளிக்க வந்தேன்” என்றார்.

இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த கடைக்காரரை அழைத்து வரும்படி கூறினார். தகவல் அறிந்த கடைக்காரர் தானாகவே போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் விளக்கமளிக்கையில், “முதிர்ந்த ஆட்டின் இறைச்சி சில சமயங்களில் இவ்வாறு வேகவதற்கு அதிக நேரம் எடுக்கலாம். எனவே, நான் வேறு ஒரு ஆட்டின் தலைக்கறியை எடைக்கு எடை மாற்றி தருகிறேன். மேலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ஒரு கிலோ மட்டனை இலவசமாக வழங்குகிறேன்” என்று சமரசம் செய்தார்.

இரு தரப்பும் இதற்கு ஒப்புக்கொண்டதால் பிரச்சனை அமைதியாக முடிவடைந்தது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related News

Latest News