மும்பையில் உள்ள நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் நிதி முறைகேடுகள் மற்றும் பலவீனமான நிதி நிலையைக் கருத்தில் கொண்டு அந்த வங்கி மீது ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தத் தடை பிப்ரவரி 13ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இந்த வங்கியிலிருந்து பணத்தை எடுக்க முடியாது.
வங்கியின் பணப்புழக்க நிலை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வங்கி மீதான தடை தொடர்பான செய்தி பரவியதும் மும்பை அந்தேரியில் உள்ள விஜயநகர் கிளைக்கு வெளியே ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த அதிரடி நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.