முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், FMCG துறையில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் தனது நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது. இதற்கான முக்கிய முயற்சியாக, ரிலையன்ஸ் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் அதாவது RCPL நிறுவனம், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்துடன் ரூ.40,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், நாடு முழுவதும் ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக உலக உணவு இந்தியா 2025 நிகழ்வில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டில் நடைபெற்ற AGM-ல், ரிலையன்ஸ் நிறுவனம், ‘செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் நிலையான தொழில்நுட்பங்களுடன் ஆசியாவின் மிகப்பெரிய உணவுப் பூங்காக்களை உருவாக்குவோம்’ என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ரீடெய்லில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட RCPL, மூன்று ஆண்டுகளில் ரூ.11,000 கோடி வருவாய் ஈட்டி, இந்தியாவின் அதிவேகமாக வளரும் FMCG நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. புதிய ஒப்பந்தத்தின் படி, மகாராஷ்டிரா மாநில நாக்பூர் மாவட்டம் காட்டோல் மற்றும் ஆந்திரப் பிரதேசம் கர்நூல் ஆகிய இடங்களில் உணவுப் பொருட்கள், பான உற்பத்தி ஆலைகளை அமைக்க நிறுவனம் ரூ.1,500 கோடிக்கும் மேல் முதலீடு செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் இயக்குநர் ஈஷா அம்பானி, RCPL நிறுவனத்தை குழுமத்தின் ‘வளர்ச்சி என்ஜின்’ எனக் குறிப்பிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதே இலக்காகும் என தெரிவித்தார். ஏற்கனவே Tagz Foods, Campa, Independence, Alan’s, Enzo, Ravalgaon போன்ற பிராண்டுகளை கையகப்படுத்திய RCPL, FMCG சந்தையை ஆக்கிரமிக்க முனைந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட் தொழில் பூங்காவில் பெரும் உணவு உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு முதல் பெட்ரோ கெமிக்கல் வரை பல துறைகளில் முன்னிலை வகிக்கும் ரிலையன்ஸ், தற்போது FMCG துறையிலும் தன் செல்வாக்கை விரிவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.