கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி(வயது 55). இந்த தம்பதிக்கு விஜய்(28), ஸ்ரீராம்(25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் விஜய், வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியதோடு, மதுபோதைக்கு அடிமையானார். இதனால் மதுகுடிக்க பணம் கேட்டு தனது தாயாரிடம் விஜய் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த விஜய், ராஜலட்சுமியிடம் மீண்டும் மதுகுடிக்க பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், சமையல் அறையில் இருந்த மைக்ரோ ஓவனை எடுத்து தாயாரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ராஜலட்சுமி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர்.
