Saturday, December 21, 2024

அன்னப் பறவை

பெண்களின் நடையை அன்ன நடை என்று
கவிஞர்கள் வர்ணிப்பர்.

பெண் அன்னப் பறவையானது மயில்போல் ஆடும்.
பெண் அன்னப் பறவை நடந்துசெல்வதைப் பார்ப்பதற்கு
அழகாக இருக்கும். இதனால்தான் பெண்கள் நடந்து
செல்வதை அன்ன நடை என்று ஒப்பிட்டு வர்ணிப்பர்.

கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல
ஆராய்ந் தமையுடையக் கற்பவே
நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து
என்கிறது நாலடியார்.

எல்லையில்லாதது கல்வி. மனிதர்கள் வாழ்வோ
அளவான காலம்தான். அதிலும் நோய் வாய்ப்படும்
தருணங்களில் எச்செயலையும் செய்ய இயலாது.

குறைவான வாழ்நாளில் நல்ல நூல்களைக் கற்கவேண்டும்.
பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும்
பருகும் அன்னப் பறவையைப்போல, பயனற்ற நூல்களைத்
தவிர்த்து, கற்கத் தகுந்த நூல்களை மட்டுமே கற்க வேண்டும்
என்பதே இதன் பொருள்.

தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் பாலை மட்டுமே
அன்னப் பறவை பருகும் என்பது இலக்கியங்களில் உள்ளது.
ஆனால், விஞ்ஞானிகள் இதை ஒப்புக்கொள்வதில்லை.

வாத்து, நாரை போன்ற பறவை இனத்தைச் சார்ந்ததுதான்
அன்னப் பறவை. வாத்து மீன்களை உண்ணும் வழக்கமுள்ள
அன்னப் பறவை பெரும்பாலும் நீர்நிலையில் நீந்திக்கொண்டே
தனக்கான இரையைத் தேடிக்கொள்ளும்.

தண்ணீரிலிருந்து இரையைப் பெறும்போது அதனுடன் சேர்ந்து
சேறோ சகதியோ வேறுபொருட்களோ வயிற்றுக்குள் சென்று
விடாமல் இருக்க அதன் வாயில் சல்லடை போன்ற அமைப்பு
இருக்கும்.

இந்த சல்லடை அமைப்பு வேண்டாத பொருட்களைத் தடுத்து
விடும். இதன் பற்களும் உணவை உண்பதற்கும் திரவப் பொருட்
களை வடிகட்டி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
இதனை நாம் நன்கு காணமுடியும்.

அன்னப் பறவைகளில் ஏழுவிதமான இனங்கள் உள்ளன.
முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் அன்னப் பறவைகள்
மூன்றுமுதல் எட்டு முட்டைகள் இடுகின்றன.

அன்னப் பறவை வெண்ணிறத்தில் காணப்படும்.
மென்மையான தூவிகளையும் சிவந்த கால்களையும்
வலிமையான சிறகுகளையும் கொண்டவை இதன் கழுத்து
அழகாகவும் சற்று நீண்டும் இருக்கும்.

அன்னப் பறவைகள். கூட்டமாய் மேயும் இயல்புகொண்ட
அன்னப் பறவைகள் நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றல்கொண்டவை.

மழை மேகம் திரண்டுவிட்டால் அவற்றைப் பார்த்து மகிழ்ந்து
விண்ணில் பறக்க ஆரம்பிக்கும். அதிக இரைச்சலிடும்
சுபாவமுள்ளவை அன்னப் பறவைகள்.

இவை இரவில் விழித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வயல், குளம்குட்டைகளிலும் உப்பங்கழிகளிலும் அன்னப்
பறவைகள் மேயும். ஆற்று முகத்துவாரத்தில் தன் துணை
யோடு சேர்ந்து திரியும் கடற்கரை மணல்மேடுகளிலும்
தாழைமரத்திலும் தங்கியிருக்கும்.

நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடையவை அன்னப்
பறவைகள். பொதிகை மலையில் அன்னப் பறவை
வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது- இமயமலையிலுள்ள
மானசரோவர் ஏரியில் அன்னப் பறவைகள் உள்ளதாகக்
கூறப்படுகிறது.

குளிர்ப் பிரதேச நாடுகளுள் அமைதியான ஏரிகளுள்
விரும்பி வாழும். ஐரோப்பிய நாடுகளுள் அன்னப் பறவை
இன்றும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

கனடா, சுவிட்சர்லாந்து நாட்டு ஏரிகளுள் அதிக எண்ணிக்கையில்
அன்னப் பறவைகள் தற்போதும் உள்ளன. 12 வருடங்கள்தான்
அன்னப் பறவை உயிர் வாழுமாம்.

37 வருடங்களுக்கு மேலாக உயிர்வாழும் அன்னப் பறவை
ஒன்று துருக்கி நாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டில்
வசித்துவரும் மீர்ஜான் என்னும் அன்பர் ஒருவர், சாலையில்
அடிபட்டுக்கிடந்த அன்னப் பறவையை தன் வீட்டுக்கு
எடுத்துவந்து சிசிக்சையளித்துள்ளார்.

அதன்பலனாக முழுவதும் குணமாகிய அந்த அன்னப் பறவை
அவரைவிட்டுப் பிரியாமலேயே இருந்துள்ளது. மீர்ஜானும் அந்த
அன்னப் பறவையைத் தன் மகள்போல வளர்த்துவருகிறார்.

அளப்பரிய அன்பு கிடைத்ததாலோ என்னவோ ஆயுட்காலத்தையும்
கடந்து வாழ்ந்து வருகிறது இந்த அன்னப் பறவை.

கங்கையில் மூழ்கினாலும் காகம் அன்னப் பறவை ஆகுமா?
அன்னப் பறவை உண்மையோ கற்பனையோ, இந்தக் கதையில்
வருவதுபோல, நாம் நல்லவற்றையே பிறரிடமிருந்து எடுத்துக்
கொள்வோம்.

அறிவை விருத்திசெய்யும் நன்னூல்களையே
நாடிச்சென்று படிப்போம். அறிவால் உயர்ந்து அகிலத்தையே
ஆட்சிசெய்வோம்.

Latest news