Friday, February 14, 2025

இந்தியாவில் மிகவும் ஏழ்மையான மாநிலம் இதுதான். அப்போ தமிழ்நாடு??

மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பதால், உலகத்தின் மிகப்பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் எண்ணிக்கை இங்கே அதிகம்.

வெவ்வேறு மொழி, கலாச்சாரம், உணவு என்று ‘வேற்றுமையில் ஒற்றுமை’க்கு எடுத்துக்காட்டாகத் திகழும், இந்தியாவில் இன்னும் கூட வறுமையை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை. எனவே பொருளாதார ரீதியாக, இன்னும் வளரும் நாடுகள் பட்டியலிலேயே இந்தியா இருக்கிறது.

இந்தநிலையில் நாட்டின் மிகவும் ‘ஏழ்மையான மாநிலம்’, மற்றும் வறுமையைக் கட்டுக்குள் வைத்துள்ள மாநிலங்கள் குறித்த ஆய்வு முடிவுகள், தற்போது வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வறுமை நிலை, ‘தேசிய பன்முக வறுமை குறியீடு’ மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் போன்றவற்றினை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி 51.9 சதவீத வறுமையுடன் இந்தியாவின் ‘ஏழ்மை மாநிலமாக’ பீகார் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களை ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா மாநிலங்கள் பிடித்துள்ளன. அதே நேரம் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கரில் வறுமை வேகமாகக் குறைந்து வருவதாக, ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

நாட்டிலேயே வறுமையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலம் என்ற பெருமை ‘கடவுளின் தேசமான’ கேரளாவுக்குக் கிடைத்திருக்கிறது. அங்கு மொத்த மக்கள் தொகையில் 0.71% மக்கள் மட்டுமே, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதற்கு அடுத்த இடங்களை 3.76 சதவீதத்துடன் கோவா, 3.82 சதவீதத்துடன் சிக்கிம், 4.89 சதவீதத்துடன் தமிழ்நாடு மற்றும் 5.59 சதவீதத்துடன் பஞ்சாப் மாநிலங்கள் பிடித்துள்ளன.

வறுமை குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில், நம்முடைய தமிழ்நாடு நான்காவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் வறுமையை முற்றிலும் ஒழித்து, இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news