இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கியது தேஜஸ் எக்ஸ்பிரஸ். இது இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவையாகும். அரசின் IRCTC நிறுவனம் இதை 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
பொதுவாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரயிலில் பயணம் செய்வது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். இந்தியாவில் பல்வேறு வகையான ரயில்கள் இயங்குவதால், அவற்றின் கட்டணங்களும் வேறுபடுகின்றன.
இதுவரை ரயில் என்று மக்கள் நினைப்பவை ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்றவை அதிக விலையுடையாக இருந்தன. ஆனால் இவற்றை விட விலையுயர்ந்த தனியார் ரயில் ஒன்று தற்போது நாட்டில் இயங்குகிறது. அதுதான் தேஜஸ் எக்ஸ்பிரஸ்.

இதில் அப்படி என்ன இருக்கிறது?
அதிநவீன வசதிகளுடன் இயங்கும் இந்த அதிவேக ரயில், நேரத்தை மதிக்கும், சௌகரியம் மற்றும் ஆடம்பரத்தை விரும்பும் பயணிகளுக்கு விரைவில் விருப்பமான தேர்வாக மாறியுள்ளது.
ரயிலின் ஒவ்வொரு பெட்டியும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள், முழுமையான குளிர்சாதன வசதி, வைஃபை இணைப்பு, சிசிடிவி கண்காணிப்பு, சிற்றுண்டி தட்டுகள் போன்ற வசதிகள் உள்ளன.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 200 கிலோமீட்டர் செல்லும். எனினும், தற்போதைய பாதை வரம்புகள் காரணமாக இவை அதிகபட்சம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் தான் இயக்கப்படுகின்றன.
அதிக கட்டணம் இருந்தாலும், அதன் தரமான சேவைகள் மற்றும் நேர்த்தியான பயண அனுபவம் காரணமாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பயணத்தின் அடையாளமாக திகழ்கிறது.
