பெரும்பாலும் பழங்கள் அல்லது காய்கறிகளின் விதைகளை விற்பனை செய்தால் அதிகம் வருமானம் கிடைக்காது. ஆனால், ஒரு அரிய விதையை மட்டும் விற்றால் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. அந்த அரிய விதை ‘கோகோ டி மெர்’ (Coco de Mer) எனப்படும் கடல் தேங்காய் விதை.
இந்த அரிய இன விதை இந்தியப் பெருங்கடலில் உள்ள சீஷெல்ஸ் நாடின் வாலிஸ் மற்றும் பிரஸ்லின் என்ற இரண்டு சிறிய தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. இதன் அளவு மற்றும் எடை உலகில் எந்த விதையுடனும் ஒப்பிட முடியாதது.
பொதுவாக இதன் எடை 15 முதல் 20 கிலோ வரை இருக்கும் நிலையில், சில விதைகள் 18.6 கிலோ வரை எடையைக் கொண்டிருக்கின்றன. நீளம் சுமார் 40 முதல் 50 செ.மீ., அகலம் 18 முதல் 20 செ.மீ. வரை இருக்கும். தனித்துவமான வடிவத்தால், இது உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்த விதை லோடோசியா மால்டிவிகா (Lodoicea maldivica) எனப்படும் பனைமரத்தில் வளரும். இந்த மரம் மிகவும் மெதுவாக வளரும் தன்மை கொண்டது. இதில் பழம் காய்க்க 25 முதல் 50 ஆண்டுகள் ஆகும். ஒரு விதை முழுமையாக பழுக்க சுமார் 45 ஆண்டுகள் எடுக்கிறது. மரங்கள் 30 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளர்ந்து, 800 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.
கோகோ டி மெர் முதலில் போர்த்துகீசிய மாலுமிகளால் கண்டறியப்பட்டது. கடலில் மிதந்த இந்த விதையை “கடலின் புதையல்” என அவர்கள் நினைத்தனர். 19ஆம் நூற்றாண்டில் இதன் மதிப்பு உயர்ந்ததால் கடற்கொள்ளையர்களும் இதை தேடி சென்றனர்.
தற்போது ஒரு விதையின் விலை 600 முதல் 1,000 அமெரிக்க டாலர் வரை, அதாவது ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை மதிப்பிடப்படுகிறது. தற்போது உலகில் 8,000-க்கும் குறைவான கோகோ டி மெர் மரங்கள் மட்டுமே உள்ளதால், சீஷெல்ஸ் அரசு இதை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவித்து, உரிமம் இல்லாமல் ஏற்றுமதி செய்வதைத் தடை செய்துள்ளது.
