கோவில்பட்டி பகுதியில் மாயமான 5 ஆம் வகுப்பு மாணவன், வீட்டின் அருகேயுள்ள மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வசித்து வரும் கார்த்தி- சுந்தரி தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் மணிகண்டன், அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் கருப்பசாமி 5 ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
உடல்நிலை சரியில்லாததால் கருப்பசாமி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்த கருப்பசாமி மாயமாகி விட்டதாகவும், மாயமான சிறுவன் கழுத்தில் நகை அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவனை உறவினர்கள் தேடி வந்த நிலையில், கருப்பசாமி இன்று அதிகாலை மொட்டை மாடியில் சடலமாக கிடந்தான்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடல் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து 6 மணி நேரம் ஆவதாக தெரிவித்தனர்.
மாயமான சிறுவன் நகைக்காக கடத்தப்பட்டானா அல்லது வேறு ஏதும் காரணமாக என்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.