Wednesday, June 4, 2025

“இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்” – அமைச்சர் ரகுபதி பேட்டி

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது :

திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படும் எனச் சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள். அதே போல 60 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வைத்த சாட்சியங்கள், வலுவான வாதங்களின் மூலம் விரைவாகத் தீர்ப்பு பெறப்பட்டு நீதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பொள்ளாட்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக உண்மையான நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த பழனிசாமியால்தான் அந்த வழக்கில் நீதிக் கிடைக்க 6 ஆண்டுகள் ஆனது. ஆனால் ஐந்தே மாதங்களில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.

அந்த வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம்போலத் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி ஞானசேகரன் தான் என நீதிமன்றம் உறுதி செய்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்விநிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்பபுத்தியோடு ‘யார் அந்தச் சார்?’ என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டிருக்கிறது.

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இது போன்று பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news