எடப்பாடி பழனிசாமி கோழைச்சாமி என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடிமீது, அமித்ஷா மீதும் இ.பி.எஸ்.-க்கு பயம் என்றும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு பற்றியும் அமைச்சர் கே.என்நேரு பதில் அளித்துள்ளார். அதில், பாஜக-வுடன் கள்ளக்கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் பாஜக -வை கண்டிக்க துணிச்சல் இல்லாமல் வலியுறுத்தல் என்றே தீர்மானம் என இருப்பதாகவும் அவர் குறீிப்பிட்டுள்ளார். பழனிசாமியின் “பய” பட்டியல் சீனப்பெருஞ்சுவர் போல நீளமானது என்றும் நேரு தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச்சட்டத்தை ஆதரித்தது, முத்தலாக் சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என இரட்டை நிலைப்பாட்டை அதிமுக எடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜக-வின் உன்னத தோழன்தான் பழனிசாமி என்றும் நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை ஆதரித்த விவசாயிதான் பழனிசாமி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் அத்தனை திட்டங்களையும் ஆதரிக்கும் கோழைதான் பழனிசாமி என்றும் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.