Monday, December 22, 2025

கேடு கெட்டவர், மனிதனாக இருக்க தகுதி இல்லை : சி.வி சண்முகத்தை விளாசிய அமைச்சர் கீதா ஜீவன்

அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்க பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :

அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ”தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.

அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை.

எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அந்த சொரணைகூட பழனிசாமிக்கு இருக்காதா? ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்?

மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் ‘பொண்டாட்டி இலவசம்’என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம்.

பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News