Saturday, March 15, 2025

‘நீங்க’ வந்தா மட்டும் போதும் முன்னாள் CSK வீரருக்கு ‘ஸ்கெட்ச்’ போடும் MI?

இன்னும் IPL தொடர் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் மூன்று முக்கிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருக்கின்றனர். 5 முறை டைட்டில் வென்ற அணி என்பதால், மும்பையுடன் மோதுவது என்றாலே ஒரு நேரம் பிற அணிகள் பயப்படும்.

இப்போது எல்லாமே தலைகீழாகி விட்டது. கடந்த சில வருடங்களாக பிளே ஆப் சென்றாலே, அதிசயம் என்னும் நிலையில் தான் மும்பையின் நிலை உள்ளது. 100 கோடி ரூபாய் கொடுத்து, ஹர்திக் பாண்டியாவை திரும்ப மும்பைக்கு அழைத்து வந்தும் கூட, அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

மாறாக ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது தான் மிச்சம். தற்போது தொடர் துவங்குவதற்கு முன்பாகவே, இந்திய வீரர் பும்ரா மற்றும் ஆப்கானிஸ்தான் பவுலர் கசன்பர் இருவரும் ஆடுவது சந்தேகம் என்றாகி விட்டது. இவர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தே விலகி இருப்பதால், IPL விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

இது மட்டுமின்றி நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக, இந்த தொடரில் இருந்து விலகலாம் என்று தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் தொடர் என்பதால், வெளிநாட்டு வீரர்கள் வழக்கம்போல தொடரின் பாதியில் கழண்டு கொள்வர்.

இந்திய வீரர்களை வைத்துத்தான் மிச்சமுள்ள போட்டிகளை ஆட முடியும். தற்போது ஒரு மாதம் முன்பாகவே மூன்று வீரர்களை மும்பை இழந்து நிற்கிறது. இதனால் இந்த 2025 IPL தொடரும், மும்பைக்கு சிறப்பாக அமையாமல் போகலாம்.

இந்தநிலையில் பும்ராவுக்கு மாற்றாக சென்னை அணியின் முன்னாள் வீரரும், ஆல்ரவுண்டருமான ஷர்துல் தாகூரை மும்பை தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மெகா ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பதால்,
தாகூர் மும்பையுடன் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

சமீபத்திய ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி T 20 தொடர்களில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் தாகூர் அபாரமாக செயல்பட்டார். இதனால் ஷர்துல் அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கும் மும்பை, அவரிடம் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளதாம்.

முன்னாள் சென்னை வீரர் தீபக் சாஹரும், இந்த IPL தொடரில் மும்பைக்காக ஆடவிருக்கிறார். சாஹருடன், ஷர்துலும் இணைந்து செயல்பட்டால் மும்பைக்கு அது நிச்சயம் பெரிய ‘பூஸ்ட்’ ஆக இருக்கும். அதோடு ‘மின்னல் வேக பந்துவீச்சாளர்’ என்று புகழப்படும், டிரெண்ட் போல்ட்டும் அணியில் இருக்கிறார்.

எனவே இந்த மூவர் கூட்டணி பும்ராவின் இடத்தை நிரப்பிடக்கூடும் என்று தெரிகிறது. இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டால் மும்பை நிச்சயம் பார்முக்குத் திரும்பி விடும். IPL தொடரை பொறுத்தமட்டில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை நம்மால் கணிக்க முடியாது.

தொடர் துவங்கிட இன்னும் 35 நாட்கள் இருக்கின்றன. எனவே என்ன நடக்கிறது என்பதை, நாம் வழக்கம்போல பொறுத்திருந்தே பார்க்கலாம்.

Latest news