Saturday, January 18, 2025

நடு ரோட்டில் நடந்த கலைஞர் : ஓடிச் சென்று அழைத்த எம்.ஜி.ஆர்

காங்கிரஸ் கட்சியானது, தேசிய அளவில் சிண்டிகேட்’ இன்டிகேட் என இரு பெரும் பிளவாக வெடித்துப் பிரிவதற்கு மூல காரணமாக இருந்தவர் வி வி கிரி. மூளை காரணமாக இருந்தவர் இந்திரா காந்தி. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சஞ்சீவ ரெட்டியைக் களமிறக்கியது. ஆனால் அப்போது இந்திரா காந்தி அந்த வேட்பாளரை விரும்பவில்லை. தனது ஆட்சி முறைகளுக்கு அவர் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று சந்தேகம் கொண்டார்.

ரெட்டி ஜனாதிபதியானால், காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் இடையே செல்வாக்குப் பெருகி, முழுக்க முழுக்க தனது தலைமைக்கு எதிராக, அவர்கள் போர்க்கொடி தூக்கி விடுவார்களோ என்று இந்திரா காந்தி பயந்தார்.எனவே அவர் நீலம் சஞ்சீவரெட்டியை எதிர்த்து ஒரு போட்டி வேட்பாளரைக் களம் இறக்கினார். அவர்தான் வி வி கிரி.

ஜாகிர் உசேன் நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த போது, துணை ஜனாதிபதியாக இருந்தவர் விவி கிரி. அவர் இந்திரா காந்தியுடன் இணக்கமாகவும், விசுவாசமாகவும் நடந்து கொண்டார். எனவே தான் அவரையே ஜனாதிபதியாகக் கொண்டு வருவது என்று இந்திராகாந்தி தீர்மானித்தார். தமிழக வாழ்விடத்தைக் கொண்ட வி வி கிரியின் தேர்தல் களமாடலில் அவரே வென்றார். ஜனாதிபதி ஆனார். இந்திரா காந்தியின் பகிரங்கப் பிரச்சாரத்தின் காரணமாக, விவி கிரி வாகை சூடினார்.

“மனசாட்சிப்படி ஓட்டு போடுங்கள்” என்று காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களுக்கு இந்திரா காந்தி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, அது தேசிய அளவில் சர்ச்சைக்கு வித்திட்டது. கட்சியோ வெடித்துச் சிதறியது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளரை எதிர்த்து, காங்கிரஸ் அமைச்சரவையை நடத்தி வந்த இந்திரா காந்தியே குறுக்குச் சால் ஓட்டியது வரலாறு சந்தித்த விபரீதம்.

விவி கிரி ஜனாதிபதியானால், தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார், தான் சொல்வதைக் கேட்பார் என்று இந்திரா காந்தி முழுமையாக நம்பினார். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவே விவி கிரி தனது பதவிக்காலத்தில் செயல்பட்டார். இது தொடர்பான நையாண்டிச் சொல்லாடல் ஒன்றை துக்ளக் ஆசிரியர் சோ தனது பத்திரிக்கையில் பிரசுரம் செய்ததை இங்கே சுட்டிக் காட்டலாம்.

அந்த கால கட்டத்தில் துக்ளக் இதழின் அட்டைப் படத்தில் ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து, ஜனாதிபதி விவி கிரி தொலைபேசியில் பேசுவது போல ஒரு பக்கமும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி அதே போன்று தொலைபேசியில் பேசிக்கொணடு இருப்பதாகவும் அந்த கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது. வி வி கிரியும் இந்திரா காந்தியும் பேசிக் கொள்வது போன்ற சித்தரிப்பு தான் கார்ட்டூன் நோக்கம்.

அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்த கற்பனா வசனத்தை அந்த கார்ட்டூனில் சோ குறிப்பிட்டிருந்தார். அந்த உரையாடல் இதோ:

“இந்திரா காந்தி: ஹலோ மிஸ்டர் சரி….
வி வி கிரி: என் பெயர் சரி இல்லைங்க. கிரி. ஆனால் நீங்க என்ன சொன்னாலும் சரி.”

-இப்படித்தான் அந்த உரையாடல் வாசகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்திரா காந்தி என்ன சட்டத்தைக் கொண்டு வந்தாலும், ‘ஓகே’ என கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடும் அளவுக்கு விவி கிரி சாதகமாகவே இருந்தார். அதை உணர்த்தும் வகையில் தான் அந்த கார்ட்டூன் அச்சிடப்பட்டு, வெளியாகி இருந்தது.

தொழிற்சங்கத்தின் தலைவர்கள் என்றால் புரட்சி முழக்கங்கள் எழுப்பியே பழக்கப்பட்டவர்கள் என்பதுதான் வரலாறு. சாத்வீக மொழியில் அரசியல் நடத்தி வந்த விவி கிரியோ, சாந்த சொரூபராக, அடங்கி ஒடுங்கிச் செயல்படும் ஜனாதிபதியாகவே செயல்பட்டார் என்பதே வினோத வரலாறு.

இந்த தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சி உடைந்தது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து இயக்கிய அமைப்புக்கு சிண்டிகேட் காங்கிரஸ் என்று, செய்தியாளர்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதத் தொடங்கினர். ஸ்தாபன காங்கிரஸ் என்பது அதிகாரபூர்வமான கட்சிப் பெயர். இந்திரா காந்தி தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து நடத்திய கட்சியை இண்டிகேட் என்ற பெயரால் செய்தியாளர்கள் களமாடி வந்தனர்.

அந்த கால கட்டத்தில், தமிழகத்தில் எந்த காங்கிரஸ் தலைவரைப் பார்த்தாலும் செய்தியாளர்களாகிய நாங்கள் கட்டாயம் ஒரு கேள்வியை வழக்கமாக்கி வைத்திருந்தோம். ஒரு முறை சின்ன அண்ணாமலை எங்களிடம் சிக்கிக் கொண்டார். அவரிடமும் இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவரின் பதில் எங்களுக்குத் தெளிவைத் தரவில்லை. குழப்பத்தான் வைத்தது. அது இதோ:

நிருபர்: சார் நீங்கள் சின்டிகேட்டா…இன்டிகேட்டா?

சின்ன அண்ணாமலை: அதுதான் எனக்கு டெலிகேட் ஆக இருக்கிறது.

அப்போதைய காலகட்டத்தில் காங்கிரசார் இப்படித்தான் குழப்பமான நிலையில் இருந்து வந்தார்கள். பிரம்மானந்த ரெட்டி தலைமையில் சிண்டிகேட் காங்கிரஸ், அரசியல் நடத்தியது. ஸ்தாபன காங்கிரஸ் என்று அதற்குப் பெயரிடப்பட்டது. காமராஜர் அந்த கட்சியின் முக்கியத் தலைவராக தேசிய அளவில் அறியப்பட்டார்.

இந்திரா காந்தி இன்டிகேட் காங்கிரசை வழி நடத்தினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்தக் கட்சியை இந்திரா காங்கிரஸ் என்று செய்தியாளர்கள் குறிப்பிடத் தொடங்கினர். தேர்தல் கமிஷனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி (ஆர்) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட்டது. அப்போதெல்லாம் டி என் சேஷன் தேர்தல் கமிஷனின் பொறுப்பில் இல்லை. எனவே இந்திரா காந்தி நினைத்ததை முடித்துக் காட்ட முடிந்தது.

அந்த சூழலில் சென்னைக்கு வந்திருந்த சிண்டிகேட் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரம்மானந்த ரெட்டி, சின்ன மலை அருகே இருந்த திருமண மண்டபத்தில் கட்சியின் முக்கிய பிரபலங்களோடு ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் அடியேனும் ரகசியமாகப் பங்கேற்றுச் செய்தி எழுதியிருக்கிறேன்.

வி வி கிரி பற்றிய அரசியல் பின்னணிகள் இங்கே அலசப்படுவதற்குக் காரணம் உண்டு. ஜனாதிபதி பதவியை நிறைவு செய்து முடித்தவராக விவி கிரி ஓய்வு பெற்று, சில ஆண்டு காலம் வாழ்ந்து வந்தார். வயது மூப்பு மற்றும் உடல் தடிப்புக் காரணமான அவர் 1980 ஜுன் 23-ல் சென்னையில் மரணம் அடைந்தார். அவரின் வீடு தி. நகர் ஜி என் செட்டி சாலையில் உள்ள கிரி தெருவில் தான். அங்கு தான் அவரின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது. இறுதிச் சடங்குகள் சென்னையில் தான நடைபெற்றன.

வி வி கிரி உடலை நல்லடக்கம் செய்யும் சுடுகாட்டு மையத்தில் ஏராளமான விவிஐபிக்கள் குழுமி இருந்தனர். முப்படைத் தளபதிகளும் அவர்களில் அடக்கம். அவர்களோடு செய்தியாளர் என்ற வகையில் அடியேனும் இருந்தவனாகச் செய்திகளைத் தொகுத்து எழுதினேன். ஜனாதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரின் இறுதிச் சடங்கின் போது மத்திய அரசாங்கம் எத்தகைய சடங்குகளை எல்லாம் செய்யும் என்பதை நான் அப்போதுதான் நேரடியாகக் கண்டு, தெளிவு பெற்றேன்.

வி வி கிரியின் இறுதிச் சடங்குகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் அதன் முழு பொறுப்பையும் தேசிய அரசாங்கத்தின் விதிமுறைப்படி, ராணுவம் ஏற்றுக் கொண்டது. விவி கிரியின் உடல் இறுதிப் பயணத்திற்குத் தயாரான நிலையில் பிவி கிரியின் வீட்டுக்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்ற எண்ணத்தோடு தன் காரில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கருணாநிதி கிளம்பிச் சென்றார். அண்ணா மேம்பாலம் அருகே ஏராளமான கூட்டம் குழுமி இருந்தது. இதனால் வாகனங்கள் நகர முடியாத அளவுக்கான ஜன நெரிசல் காணப்பட்டது.

சடங்குக்கான நேரமோ நெருங்குகிறது. வாகனத்துக்கோ வழி இல்லை .என்ன செய்வது என்று சில நிமிடங்கள் யோசித்த கருணாநிதி, காரை விட்டுச் சாலையில் இறங்கினார். கிரி தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினார். இதே நேரத்தில் முதலமைச்சர் எம்ஜிஆரின் கார், அண்ணா மேம்பாலம் அருகே வந்தது. குதிரை வீரன் சிலை இருக்குமிடம் வரையிலும் வந்த அவரின் கார், திரள் கூட்டம் காரணமாக நகர முடியாமல் நின்றது. ஆகவேதான் ஒருபுறம் எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியின் காரும், மறு புறம் முதல் அமைச்சர் எம்ஜிஆரின் காரும் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டன.

காரில் அமர்ந்திருந்த எம்ஜிஆர் என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். அதற்குள் காவல்துறை அதிகாரிகளின் உரிய முன்னெடுப்புகளுக்குப் பிறகு, முதலமைச்சரின் கார் அந்த வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டது. அந்த கார் புறப்படுவதற்கு முன்னதாகவே, காரில் அமர்ந்தபடியே இருந்த அவரின் பார்வையில் கருணாநிதி பட்டுவிட்டார். கலைஞர் சாலையில் நடந்து போவதைப் பார்த்ததும், எம்ஜிஆர் புரிந்து கொண்டார். உடனே காரை விட்டு இறங்கிய எம்ஜிஆர், வேகமாகச் சென்று, கருணாநிதியைப் பிடித்து விட்டார்.

விரிந்து பரந்த அந்த மையச் சாலையில், வாகன நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், இருவர் மட்டும் சந்தித்துக் கொண்டு, பழைய கால நிகழ்ச்சிகளைச் சிந்தித்துக் கொண்டனர். பின்னர் கருணாநிதியை அழைத்துக் கொண்டு, தன் கார் வரை வந்த எம்ஜிஆர், அவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு நேரே கிரி தெருவுக்குப் புறப்பட்டு விட்டார்.

களத்துக்கு வந்து நின்ற காரில் இருந்து எம்ஜியாரும், கருணாநிதியும் ஒரு சேர இறங்கி வந்ததைக் கண்டு அங்கு குழுமி இருந்தோர் வியப்பால் விக்கித்துப் போயினர். அத்தகு மாந்தர்களுள் அடியேனும் ஒருவன் என்பதுதான் என் இதழியல் அனுபவத்தின் மற்றொரு ருசிகரச் சிகரம். அரசியல் மார்ச்சரியங்கள் ஆயிரம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பரஸ்பரம் பாசப் பரிவர்த்தனை செய்து கொண்ட அந்த நேச நெருக்க நெஞ்சினர், நாட்டு நாயகர்களாய் அரசியல் அரங்கின் நினைவுகளில் நிழலாடுகின்றனர்.

எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டிய திருவிழாக் கோலத்தின் ஒரு கட்டமாக, நேரடியாக அடியேன் அனுபவித்த இந்த காட்சியை ஆவணப்படுத்தி இருக்கிறேன். வெட்ட வெளிச் சாலையில் எம்ஜிஆரும் கருணாநிதியும் சந்தித்துக் கொண்டது என்பது அரசியல் களத்தின் ஆக்கபூர்வ அம்சமாகும். இதனை நிரூபிப்பதற்கு, வரலாறு ஒரு வேலையைச் செய்து விட்டது.

வி வி கிரியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற எம்ஜிஆரும், கருணாநிதியும் மக்கள் கூட்டம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது போன்றே, மற்றொருவரும் இதே நிலைக்கு இலக்கானார். அவர் பெயர் ராஜேந்திரன். தினகரன் நாளிதழின் தலைமைப் புகைப்பட நிபுணர். கிரி தெருவை நோக்கி அவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரின் வாகனமும் மறித்து நிறுத்தப்பட்டது.

சாலையில் இறங்கி ஓடிச் சென்று விடலாம் என்று கேமரா சகிதம் ராஜேந்திரன் அங்கு இறங்கிய போது தான் எம்ஜிஆரும் கருணாநிதியும் சாலையின் நடுவே சந்தித்துக் கொண்ட காட்சியைப் பார்த்தார். அவர் மின்னல் வேகத்தில் பாய்ந்தோடிய போது, இரு ஆளுமைகளும் எம்ஜிஆர் காரில், பின் சீடடில் ஏறிவிட்டனர். அப்போது முன்சீட்டில் கடுகடுத்த முகத்தோடு நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தார். இந்த காட்சியை ராஜேந்திரன் கிளிக் செய்து விட்டார்.

தினகரன் நாளிதழில் மறுநாள் மிகப் பெரிதாக அந்த படம் எக்ஸ்க்ளூசிவ் என்ற தகுதியோடு பிரசுரம் ஆனது. தினகரன் நாளிதழின் வெள்ளிவிழாச் சிறப்பு மலரில் இந்த படமும் இடம் பெற்று இருக்கிறது. இந்த சிறப்பு மலர் தற்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆர்வமிருப்போர் அண்டிச் சென்று, கண்டு மகிழலாம்.

ஆர் நூருல்லா
மூத்த பத்திரிகையாளர்

Latest news