இந்தியப் பொருட்கள் மீதான வரியை மெக்சிகோ உயர்த்திய நிலையில், அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளது.
உள்நாட்டு சந்தையைப் பாதுகாக்கும் வகையில், இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை 50 சதவீதம் வரை உயர்த்தி மெக்சிகோ அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதனால், வாகனங்கள், ஜவுளி, இரும்பு மற்றும் ஸ்டீல், தோல் பொருட்கள், காலணி உள்ளிட்டவற்றின் 18 ஆயிரத்து 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், மெக்சிகோ அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாகத் தெரிவித்துள்ள மத்திய வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் மெக்சிகோ அமைச்சர் லுயிஸ் ரொசண்டோவுடன் ஆன்லைனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
