குஜராத் மாநிலம், கோமிட்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், 1997-ஆம் ஆண்டு காய்கறி வாங்குவதற்காக தனது வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது, அந்த நபர் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென, அவர்களால் அடிக்கப்பட்ட பந்து அந்த நபருக்கு பட்டு தாக்கியது. இதனால், அந்த நபருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.
இதையடுத்து, அந்த நபர் 4 இளைஞர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். 2009-ஆம் ஆண்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் முடிவாக, 4 இளைஞர்களும் குற்றம்சாட்டப்பட்டதில் இருந்து விடுவிக்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, மனுதாரர் 2017-ஆம் ஆண்டில் அகமதாபாத் செனஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவ்வாறு விசாரணை நடப்பதற்காக அகமதாபாத் செனஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. ஆனால், கோர்ட் அதன் தீர்ப்பில் 4 இளைஞர்களையும் விடுவித்து, கீழமை கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த மனுதாரர், தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி நீதிபதி மீது வீச முயன்றார். இந்த நடத்தை, நீதிபதியையும் கோர்ட் வளாகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே, போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் அந்த நபரை கோர்ட்டில் இருந்து வெளியேற்றினார்கள். இந்த சம்பவம், கோர்ட் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
