திருவண்ணாமலை அருகே, சலூன் கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய விசிக பிரமுகரையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்து சொகுசு காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச்சேர்ந்த சலூன் கடை ஊழியர் அஜித்குமார், கடந்த 17ஆம் தேதி இரவு பணி முடிந்து சக ஊழியருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது, வேலூர் சாலையில் கார் ஓட்டுநர் கவனக்குறைவாக பின்னோக்கி வந்ததால், இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, காரில் இருந்த திருவண்ணாமலை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சலூன் கடை ஊழியர் அஜித்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அஜித்குமார் தப்பி கடைக்குள் ஓடியபோதும், அவரை விரட்டிச்சென்று தாக்கினர்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, சலூன் கடை உரிமையாளர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார், அருண்குமார் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் மறைந்திருந்த அருண்குமார், அவரது கூட்டாளி நாகராஜ் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மாரி, மணி இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.