ரேஷன் பொருட்களில் வரும் அதிரடி மாற்றம்? பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள சுமார் 18 லட்சம் ஏழைக் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கியமான கடிதத்தை எழுதியுள்ளார். மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தம், தமிழகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினரைப் பாதிக்கும் என்பதால், அதனை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ எனப்படும் ஏழையிலும் ஏழைகளுக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ இலவச அரிசியைத் தடையின்றித் தொடர வேண்டும் என்பதே முதலமைச்சரின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

மத்திய அரசின் புதிய திருத்தத்தின்படி, அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்குக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்க்காமல் வழங்கப்பட்டு வந்த 35 கிலோ அரிசி முறை மாற்றப்பட உள்ளது. புதிய விதியின்படி, ஒரு நபருக்கு மாதம் 7 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படும் என்றும், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம்தான் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சராசரி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதால், 5 பேருக்கும் குறைவாக உறுப்பினர்களைக் கொண்ட சுமார் 15.75 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இனி 35 கிலோ அரிசி கிடைக்காது. இதனால் அவர்கள் பெறும் அரிசியின் அளவு கணிசமாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் சுமார் 69 லட்சம் ஏழைப் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். மத்திய அரசின் புதிய விதி அமலுக்கு வந்தால், தமிழகத்திற்கான ஒட்டுமொத்த மாதாந்திர அரிசி ஒதுக்கீடு 65,000 மெட்ரிக் டன்னிலிருந்து 42,000 மெட்ரிக் டன்னாகக் குறையும். இது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என்று முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் இந்த மக்கள், மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு தானிய விநியோகத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது முறையல்ல என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தற்போதைய நடைமுறைப்படியே ஒவ்வொரு குடும்பத்திற்கும் 35 கிலோ அரிசி வழங்கும் முறையைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசின் கொள்கை முடிவுகளால் தமிழக மக்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிராகத் தனது முதல் வலுவான குரலைப் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் பதிவு செய்துள்ளார். ஏழை மக்களின் உரிமைகளைக் காக்கத் தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நகர்வு, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Related News

Latest News