எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காக இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்து சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அவரது ராஜினாமாவை ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் அண்மைக் காலத்தில் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கரும் அதே பாதையைத் தேர்வு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டாலும், அதில் திருப்தியில்லாத சூழல் நீடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிருப்தியின் பின்னணியிலேயே அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது ராஜினாமா, அதிமுகவின் உள்கட்சி நிலைமை குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
