ரயில்களில் தினந்தோறும் பல கோடி மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், பெண்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் லோயர்பெர்த் ஒதுக்கீடு தொடர்பாக முக்கியமான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் போது லோயர்பெர்த் கிடைக்காமல் அப்பர் பெர்த் கிடைத்து வருகிறது. இவர்களால் அப்பர் பெர்த்தில் ஏற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பெண்களுக்கு குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இனி ரயிலில் லோயர்பெர்த் ஒதுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய மாற்றங்கள் என்ன?
முன்பதிவு செய்யும்போது விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் முன்னுரிமை அடிப்படையில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகளுக்கு ரெயிலில் லோயர்பெர்த் வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், கர்ப்பிணியர் ஆகியோருக்கு ரெயிலில் கீழ் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஸ்லீப்பர் வகுப்பில், ஒரு பெட்டிக்கு ஆறு முதல் ஏழு பெர்த்களும், மூன்றாம் வகுப்பு ‘ஏசி’ பெட்டியில் நான்கு முதல் ஐந்து பெர்த்களும், இரண்டாம் வகுப்பு ‘ஏசி’ பெட்டியில் மூன்று முதல் நான்கு பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரெயில் பயணத்தில் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
அகலமான கதவுகள், அகலமான பெர்த்கள், சக்கர நாற்காலியை நிறுத்தும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகளும் அவர்களுக்கு தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன.
பார்வை குறைபாடு உள்ள பயணியர் வசதிக்காக, ‘ப்ரெய்லி’ எழுத்துகளுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நவீன அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் ரெயில்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
