Saturday, February 7, 2026

உங்கள் நகத்தை பாருங்க, வேகமா வளருதா? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்குத்தான்..!

நகங்கள் வேகமாக வளர்வது, நல்ல ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது. பொதுவாக நாம் நகங்களை வெட்டிவிட்டு, அவை எப்போது மீண்டும் வளர்கின்றன என்பதை பெரிதாக கவனிப்பதில்லை. ஆனால், குறுகிய காலத்திலேயே நகங்கள் வேகமாக வளர்ந்து, அடிக்கடி நெயில் கட்டரை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தால், அது உங்கள் உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் செயல்படுகிறது என்பதைக் குறிக்கிறது.

இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் எந்த சோர்வும் இன்றி திறம்பட செயல்படுகின்றன என்பதற்கான வெளிப்புற அடையாளமாக நகங்களின் வேகமான வளர்ச்சி பார்க்கப்படுகிறது. இயற்கையின் நியதிப்படி, வயது அதிகரிக்கும்போது உடலின் பல செயல்பாடுகள் மெதுவாகத் தொடங்கும்.

1979 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வில், 30 வயதை கடந்த பிறகு மனிதர்களின் நக வளர்ச்சி வாரத்திற்கு சுமார் 0.5 சதவீதம் வீதம் குறையத் தொடங்கும் என்று கண்டறியப்பட்டது. ஆனால், 30 அல்லது 40 வயதை கடந்தும் ஒருவருக்கு நகங்கள் வேகமாக வளர்ந்தால், அவரின் உயிரியல் வயது (Biological Age) உண்மையான வயதைவிட குறைவாக இருக்கலாம் என்று பொருள்.

ரத்த ஓட்டமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் சரியாகச் சென்று சேரும். நகங்களின் வேர்களுக்கு தேவையான சத்துகளும் ரத்தத்தின் மூலமே கிடைக்கின்றன.

வயது அதிகரிக்கும் போது ரத்த ஓட்டம் குறைவது இயல்பான ஒன்று. ஆனால் நகங்கள் வேகமாக வளர்கின்றன என்றால், அந்த நபரின் ரத்த ஓட்டம் சிறப்பாக உள்ளது என்று கருதலாம். இதே காரணத்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பருவ வயதினருக்கும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிக ரத்த ஓட்டம் காரணமாக நகங்கள் வேகமாக வளர்வதை காண முடிகிறது.

அதே நேரத்தில், நகங்களின் வளர்ச்சி வேகத்தை மட்டும் வைத்து முழுமையான ஆரோக்கியத்தை மதிப்பிட முடியாது. நகங்களின் தோற்றமும் மிக முக்கியமானது. நகங்களில் வரிகள் தோன்றுவது, வெள்ளை புள்ளிகள் காணப்படுவது, பள்ளங்கள் விழுவது போன்றவை உடலில் உள்ள சில ஊட்டச்சத்து குறைபாடுகளை சுட்டிக்காட்டும் அறிகுறிகளாக இருக்கலாம். இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், வைட்டமின் ஏ போன்றவை குறைந்தால் நகங்கள் பொலிவிழந்து சொரசொரப்பாக மாறும்.

எனவே, நகங்கள் வேகமாக வளர்கிறதா என்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் நிறம், வடிவு மற்றும் மேற்பரப்பையும் கவனிப்பது அவசியம். இவை அனைத்தும் சேர்ந்து, உங்கள் உடல்நலம் குறித்து முக்கிய தகவல்களை வெளிப்படுத்துகின்றன.

Related News

Latest News