மாநகரங்களில் உணவுக் குறைபாடுகள், விலை உயர்வுகள், கேலிக்குரிய டயட் டிப்ஸ்கள் பேசும் உலகம்… இன்று மே 28 – உலக பசியின்மை நாளை அனுசரிக்கிறது.
ஆனால், இதே நேரத்தில், ஒரு பகுதியில் உணவே ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வேதனைக்குரிய இடம் தான் – காசா.
இஸ்ரேல் தொடர்ந்து 86 நாட்களாக காசா எல்லைகளை மூடியுள்ளதால், லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கான உணவு, மருந்து, மனிதாபிமான உதவிகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன. இது பற்றி காசா அரசு ஊடக அலுவலகம் ,இஸ்ரேல் விதிவிலக்காக எல்லைகளை மூடுகிறது, இதன் விளைவாக மருத்துவமனைகள், பேக்கரிகள் போன்ற வாழ்வாதார வசதிகள் செயலிழந்துவிட்டன என தெரிவிக்கிறது .
மேலும் அதில், 90% பேக்கரிகள் இயங்காமல் செய்துவிட்டது. இது ‘பட்டினி பொறியியல்’ – அதாவது Starvation Engineering எனப்படும் கொடூரமான போர் யுக்தியின் ஒரு பகுதி எனவும் கூறப்படுகிறது.
Starvation என்ற சொல்லின் அர்த்தம் – நிதானமாக உணவின்றி ஒரு சமூகத்தை அழிக்கும்படி அழுத்தம் கொடுப்பது.
இதே முறையை பயன்படுத்தி 1941–1944 ஆம் ஆண்டுகளில் நாசி ஜெர்மனி, வார்சா கெட்டோ மற்றும் லெனின்கிராட் முற்றுகைகளில் யூதர்களையும் பொதுமக்களையும் பசியால் கொன்றது.
1983–1985-இல் எதியோப்பியா, டெர்க் ஆட்சியில், எதிரிகளின் பகுதிகளில் உணவுதானம் தடுக்கப்பட்டது.
1990கள்–2000களில் சூடான், தர்பூரில் இனவழிப்பு நடத்த பசியை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தினர்.
இப்போது, 2023–2024 காசா – இந்த வரிசையில் புதிய மையமாகியிருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த கடும் முற்றுகையில், கடந்த 80 நாட்களில் 326 பேர் பசியால், மருந்தில்லாமல் உயிரிழந்துள்ளனர்.
இப்போது காசாவில் இந்த வழிமுறை மூலம் 58 பேர் நேரடியாக ஊட்டச்சத்து குறைவாலும்,
242 பேர் உணவு மற்றும் மருந்து இல்லாததாலும்,
26 சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை இல்லாததாலும் இறந்துள்ளனர்.
மேலும், 300க்கும் மேற்பட்ட கருச்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன – ஊட்டச்சத்து இல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள் சிதைந்து போயுள்ளனர்.
இஸ்ரேல் உதவி லாரிகளை அனுமதித்ததாகக் கூறினாலும், மக்கள் தேவையின் 1% க்கும் குறைவான உதவியே உள்ளே சென்றுள்ளது. இந்த உதவிகளை பாதுகாக்க வந்த ஆறு பேர் இஸ்ரேலிய படையினரால் நேரடியாக கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காசா மக்கள் பசியால் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். அதே நேரத்தில், உலகம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கிறது. சர்வதேச சமூகங்கள் – தங்களது தார்மீக, சட்டப் பொறுப்புகளை உணர வேண்டிய தருணம் இது.
அக்டோபர் 2023 முதல், இஸ்ரேல் தாக்குதலை தடுக்காமல் தொடர்ந்துள்ளது. இப்போது, காசா போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 54,000ஐ கடந்துவிட்டதாக அந்த பகுதியின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
அந்த அதிர்ச்சி மேலும் தீவிரமாகிறது, ஏனெனில் அமெரிக்கா ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் முன்வைத்தபோது ஹமாஸ் அதற்கு ஒப்புக்கொண்டது என்ற தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அதனை மறுத்துவிடும் தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இன்று உலக பசியின்மை நாளில், உணவை ஒரு ஆயுதமாக மாற்றும் கொடூர அரசியல் போக்குகளுக்கு எதிராக ஒலி எழுப்ப வேண்டிய நேரம் இது.
பசிக்குத் தண்டனை ஏன்? உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறதே, அது இன்னொரு இனப்படுகொலையல்லவா?