தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சி பகுதியில் குடியிருப்பு வசித்து வரும் பொதுமக்கள் தற்போது அடிப்படை உரிமைக்காக, போராட்ட மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் குடியிருந்து வரும் இப்பகுதி மக்கள், தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு சட்டபூர்வமான வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் கீழவடகரை ஊராட்சி பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். வீட்டுமனை பட்டா வழங்கப்படாவிட்டால் வரும் தேர்தலை புறக்கணிப்போம் என்ற எச்சரிக்கை வாசகத்துடன் பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பேனர்கள் பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்து உள்ளது. தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
