Friday, December 27, 2024

நீங்களே தேடி  உங்களுக்கு வைத்துக்கொள்ளும் ஆப்பு!காதுக்கு ஆப்பு வைக்கும் பட்ஸ்

பூட்டுக்குள் சாவியை வைத்து திருகுவதுபோல நாம் அனைவரும் நமது காதுகளில் காதுகுடையும் ear buds –சை வைத்து நோண்டுகிறோம், இது எத்துணை மோசமான பின்விளைவுகளை தரவல்லது என்று அநேகம்பேர் புரிந்துகொள்ளாமல் உள்ளனர்.

கோழி இறகை எடுத்து காதில் விட்டு குடைந்தால், ஆஹா என்ன ஒரு சுகம்… இன்றும் கோழி இறகால் காது குடையும் பழக்கம் கிராமங்களில் இருந்து வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே கோழி இறகைத் தூக்கி எறிந்துவிட்டு ‘இயர் பட்ஸ்’ (ear buds) எனும் புதிய ஒன்றை வைத்து காது குடைந்து வருகின்றோம். இதன் மூலம் காதின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதாய் நம்பும் நமக்கு அதிர்ச்சி தரும் தகவலொன்று வெளியாகி உள்ளது.

இந்தியாவில், மக்களை தாக்கும் நோய்கள் என்று  பட்டியலிடும் நேரத்தில் மக்களே தேடிப்போய் ஏற்கும் நோய்களின் பட்டியலை நாம் எண்ணிப்பார்க்க மறந்துவிடுகிறோம். அப்படி கடந்த பத்து ஆண்டுகளில் ‘இது தவறு’ என்று தெரியாமலேயே நாம் தேடிப்போய் ஏற்கும் நோய்கள் என்ற வரிசையிலுள்ளது ஒடிடிஸ் எக்ஸ்டெர்னா (otitis externa).

அதாவது நம் உடலில் காது என்ற உறுப்பு ஒலியைக் கேட்க, ஒலியை யூகிக்க மட்டுமே பயன்படுகின்றது என்று நினைத்திருக்கின்றோம். உண்மையில் காது, கேட்க மட்டுமல்ல நமது உடலை சமநிலைபடுத்தும் (balance) ஒரு முக்கிய செயலையும் செய்கிறது.இப்படிபட்ட காது மிகவும் மென்மையான, அதே நேரம் சிக்கலான ஒரு உறுப்பும் கூட.

இப்படிப்பட்ட காதில் பட்ஸ் எனும் பஞ்சு பொருத்தப்பட்ட குச்சியை வைத்து உள்ளே உள்ள அழுக்கை நீக்குகிறோம் என்று கூறி காதை பாதுகாக்கும் செவி மெழுகை வெளியேற்றி நாமே ஒடிடிஎஸ்-எக்ஸ்டெர்னாவை தேடிப்போகிறோம் என்பதுதான் உண்மை.

நீர், பலத்தகாற்று, மாசு, பேரிரைச்சல் போன்றவைகளில் இருந்து நம் காதை காப்பாற்றிக்கொள்ள காதிலுள்ள சுரப்பிகள் செவியில் மெழுகு போன்ற திரவத்தை சுரக்கிறது. இந்த திரவமானது வெளியிலிருந்து வரும் மாசு காதினுள் செல்லவிடாமல் தடுக்கும். ஆனால் வெளிப்புற மாசு அந்த மெழுகுடன் சேர்ந்து மஞ்சள் நிறமாகிவிடுகிறது. ஆனால் இதை அழுக்கு என்று பட்ஸ் மூலம் வெளியேற்றி வருகின்றோம். அதை விட முக்கியம் காதில் பட்ஸை வைத்து குடைவதிலுள்ள சுகத்திற்காகவே இதை செய்கிறோம்.

Latest news