2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய மாற்றங்கள், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முதல் பணப்பரிவர்த்தனை வரை பல்வேறு அம்சங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் – பான் இணைப்பு தொடர்பான அபராதக் காலக்கெடு முடிவடைவதால், இன்னும் இணைக்கப்படாத பான் கார்டுகள் முற்றிலும் செயலிழக்கச் செய்யப்படலாம். இதன் காரணமாக வங்கிச் சேவைகள், வருமான வரி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல நிதி நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய சிம் கார்டு வாங்குவதற்கும், தற்போது பயன்படுத்தி வரும் சிம் கார்டுகளைத் தொடர்வதற்கும் டிஜிட்டல் KYC கட்டாயமாக்கப்பட உள்ளது. போலி சிம் கார்டுகளைத் தடுக்க அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் செய்யப்படும் கட்டண உயர்வு, 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். இதனால் சரக்கு போக்குவரத்து செலவுகளும், பொதுமக்களின் பயணச் செலவுகளும் அதிகரிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நடைமுறை தொடரும். 2026 தொடக்கத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளில் மாற்றம் செய்யப்படுவதால், ஜனவரி 1 முதல் புதிய மாடல் மொபைல் போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலையில் உயர்வு அல்லது குறைவு ஏற்படலாம்.
