உலகளவில் உளவியலாளர்களால் அடிக்கடி விவாதிக்கப்படும் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று “Dunning-Kruger Effect”. 1999-ம் ஆண்டு உளவியல் அறிஞர்கள் டேவிட் டன்னிங் மற்றும் ஜஸ்டின் க்ரூகர் இணைந்து இதை ஆராய்ந்து உலகுக்கு வெளிப்படுத்தினர்.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படை கருத்து என்னவெனில், சிலர் தங்கள் திறமை, அறிவு குறைவாக இருந்தாலும், தங்களை மிகவும் திறமையானவர்கள் என்று எண்ணிக் கொள்வார்கள். மாறாக, உண்மையில் திறமை பெற்றவர்கள் தங்களின் திறனை அடக்கமாக மதிப்பிடுவார்கள். இதனால், குறைந்த அறிவுடையவர்களே அதிக நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.
ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்னவெனில், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களே தாங்கள் சிறப்பாக Perform செய்ததாக நினைத்தார்கள். அதேசமயம், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தங்கள் திறனை குறைவாகவே மதிப்பிட்டனர். இதுவே “டன்னிங்-க்ரூகரின் விளைவு” என்று அழைக்கப்படுகிறது.
இந்த மனநிலை பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்துகிறது. அரசியல், வேலை வாய்ப்பு, சமூக உறவுகள் உள்ளிட்டவற்றில் கூட தகுதியற்றவர்கள் தான் தங்களை முன்னிலைப்படுத்தி பேசுவார்கள். ஆனால் உண்மையான நிபுணத்துவம் பெற்றவர்கள் சுருக்கமாகவும் எளிமையாகவும் பேசுவார்கள்.
அண்மை நாட்களில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி, தவறான தகவல்களை பகிர்வோருக்கு கூட அதிக நம்பிக்கை உருவாகச் செய்துள்ளது என்று உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஒருவரின் திறனை மதிப்பிடும்போது, வெறும் தன்னம்பிக்கையை மட்டும் பார்க்காமல், உண்மையான அறிவும், அனுபவமும் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
மொத்தத்தில், “Dunning-Kruger Effect” என்பது அறிவு குறைவானவர்களுக்கு அதிக நம்பிக்கை, அறிவு அதிகமானவர்களுக்கு அடக்கமான மனநிலை ஏற்படும் உளவியல் நிகழ்வாகும்.