நுரையீரலுக்கென்றே இறைவனால் படைக்கப்பட் ஒரு காய் சீனி அவரைக்காய் அல்லது கொத்தவரங்காய். பத்து ரூபாய்க்குப் பை நிறையக் கிடைக்கும் விலைமலிவான காய். ஆனால், பலர் இதை விரும்பி வாங்கிப் பயன்படுத்துவதில்லை.
கால் கிலோ கொத்தவரங்காய் வாங்கி அதன் நரம்புகளை அகற்றி சிறிதுசிறிதாக நறுக்கி அதனுடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகிய பின்பு கொத்தவரங்காயை சாப்பிடவேண்டும். இப்படித் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால், நுரையீரலில் காற்று தாராளமாக உள்வாங்கி மூச்சுத் திணறல் என்னும் பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.
கொத்தவரங்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவுக் குறைபாடுகளைக் களைகிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. மூட்டுவலியை சரிசெய்கிறது.
நரம்பு மண்டலத்தை சீராக வைத்திருக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. சிவப்பணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதய நோய் வராமல் காக்கிறது. ஆஸ்துமாவைக் குணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. சிறந்த வலி நிவாரணியாக விளங்குகிறது. கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
குழந்தையின் எலும்பு மற்றும் முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மன அழுத்தத்தை உடனே குறைக்கிறது. உடற்சூட்டைத் தணிக்கிறது. ஒவ்வாமையைப் போக்குவதிலும் அம்மை நோயை அகற்றுவதிலும் கொத்தவரங்காயின் பங்கு அளப்பரியது.
வைட்டமின் கே, போலிக் ஆசிட், இரும்புச் சத்து, கால்சியம் சத்து, நார்ச்சத்து, உடலின் அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்கும் கிளைக்கோ நியுட்டிரியன்ட், சுண்ணாம்புச் சத்து, புரதச் சத்து என உடல்நலம் காக்கும் சத்துகள் நிறைந்துள்ளன.