நடிகையும் தனது தோழியுமான பவித்ரா கவுடாவை சமூகவலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சாமி என்பவரை கடத்தி சென்று கொலை செய்ததாக நடிகர் தர்ஷன் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், தர்ஷன் உட்பட 10 பேருக்கு பிணை வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தர்ஷனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடிகர் தர்ஷனை பெங்களூருவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில், நடிகர் தர்ஷன் மாதாந்திர விசாரணையின் போது, சிறையில் இருந்தவாறு காணொளி வாயிலாக 64 ஆவது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது பேசிய அவர், பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை, தற்போதைய சூழ்நிலையில் தன்னால் உயிர் வாழ முடியாது என்பதால் தயவு செய்து தனக்கு விஷமாவது கொடுங்கள் என நீதிபதியிடம் முறையிட்டார்.
இதனை கேட்ட நீதிபதி, அப்படியெல்லாம் செய்ய முடியாது, அது சாத்தியமில்லை என்றார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.