Wednesday, July 30, 2025

‘தலைக்கு மேல் கத்தி!’ பாதாள அறையில் பதுங்கிய காமெனி! முன் வைத்த காலை பின்வைக்காத இஸ்ரேல்!

கடந்த 13ம் தேதி ஈரானை குறிவைத்து பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் விமானப் படை அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் தகர்க்கப்பட்டன. மேலும் ஈரானின் 14 அணு சக்தி விஞ்ஞானிகள் மற்றும் 3 ராணுவ தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. நான்காவது நாளாக நேற்றும் போர் தொடர்ந்தது.

குறிப்பாக ஈரான் தலைநகரான டெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் உளவுத் துறை தலைவர் முகமது கசாமி நேற்று கொல்லப்பட்டார். டெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகம் மற்றும் வெளியுறவுத் துறை அலுவலகத்தின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் அந்த இரு அலுவலகங்களும் தவிடுபொடியாக நொறுக்கப்பட்டன.

இந்நிலையில் ஈரான் மதத் தலைவரான ஹயத்துல்லா அலி காமெனி, தலைநகர் டெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் பதுங்கி உள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ தரப்பில் கூறப்பட்டதை தற்போது பார்க்கலாம்.

“கடந்த 13ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம். அன்றைக்கே ஹயத்துல்லா அலி காமெனி மீதும் தாக்குதல் நடத்தியிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறோம்.

ஈரானின் அணு ஆயுத திட்டத்தை அவர் முழுமையாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அணு ஆயுத திட்டத்துக்கான கட்டமைப்புகளை இஸ்ரேல் முழுமையாக அழிக்கும். ஹயத்துல்லா அலி காமெனி பாதாள அறையில் பதுங்கியிருந்தாலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும்” என்று இஸ்ரேல் ராணுவ தரப்பில் சூளுரைக்கப்பட்டிருப்பது போர் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News