Friday, January 3, 2025

கேரளா- கர்நாடகா சிக்கலைத்
தீர்த்து வைத்த ‘மலையாள’ திரைப்படம்…

இரண்டு மாநிலங்களுக்கிடையே நடைபெற்ற சண்டையை
ஒரு திரைப்படம் முடிவுக்கு கொண்டுவந்துள்ள விசயம்
பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

நிலத் தகராறோ சொத்துத் தகராறோ கொடுக்கல் வாங்கலோ
இந்த சண்டைக்குக்கு காரணம் அல்ல.

அப்படியென்றால், என்னதான் பிரச்சினை? தண்ணீர்ப் பிரச்சினையா
என்றால் அதுவுமல்ல… ஒருவேளை பெண் தகராறோ இருக்குமோ…நோ….

அப்படியென்ன தலையாய பிரச்சினை…?

ஒரு சின்ன பிரச்சினை… என்னன்னா… ஐந்தே ஐந்து
எழுத்துகளுக்கு யார் சொந்தக்காரங்க என்பது தான்.

KSRTC

இந்த ஐந்து எழுத்துகளுக்கு சொந்தம் கொண்டாடிதான்
இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

இது ஆங்கில எழுத்துகள் ஆச்சே….

இவங்க எப்படி சொந்தம் கொண்டாடுறாங்க…
விஷயம் இதுதாங்க…

அதாவது, கேரள அரசு தான் இயக்கிவரும் பேருந்துகளை
‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்கிற பெயரில் நிர்வகித்து
வருகிறது. ஆங்கிலத்தில் இப்பெயரை KERELA STATE ROAD
TRANSPORT CORPORATION என்று குறிப்பிட்டுப் பயன்படுத்தி
வருகிறது. இந்த நீளப் பெயரை சுருக்கமாக KSRTC என்று கேரள
மாநில அரசுப் பேருந்துகளிலும் பேருந்து பயணச்சீட்டுகளிலும்
குறிப்பிட்டுப் பயன்படுத்தி வருகிறது.

இதேபோல, கர்நாடக அரசும் தான் இயக்கிவரும் பேருந்துகளை
KARNATAKA STATE ROAD TRANSPORT CORPORATION என்று
குறிப்பிட்டுப் பயன்படுத்தி வருகிறது. இந்த நீளமானப் பெயரை
சுருக்கமாக KSRTC என்றே கர்நாடக அரசும் பேருந்துகளிலும்
பயணச்சீட்டுகளிலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆங்கிலப் பெயர்ச் சுருக்கம் இரு மாநில அரசுகளுக்கும்
குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால் இரு மாநிலங்களும்
KSRTC என்ற பெயர் தங்களுக்கே சொந்தம் என்று கூறிவந்தன.

விசயம் விவகாரமாகி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றத்தில்
மலையாளத் திரைப்படமே சாட்சியாக அமைந்து கேரளாவுக்கு
வெற்றியைத் தேடித் தந்தது. டிரேடு மார்க் விவகாரம் தொடர்பாக
அறிவுசார் சொத்துரிமை வாரியத்தில் தொடரப்பட்ட வழக்கு
7 ஆண்டுகளாக நீடித்தது.

கேரள அரசு தனது வாதத்துக்கு சாட்சியாக, 1969 ஆம் ஆண்டு
வெளியான பிரேம் நசீர் நடித்துள்ள ‘கண்ணூர் டீலக்ஸ்’ என்ற
படத்தை நீதிமன்றத்தில் காட்டியது.

திருவனந்தபுரத்துக்கும் கண்ணூர் நகரத்துக்கும் இடையே
ஓடும் கேரள அரசுப் பேருந்தான KSRTCல் நடைபெற்ற ஒரு
கொலையை விசாரிப்பதே படத்தின் கதை. இப்படத்தில்
KERELA STATE ROAD TRANSPORT CORPORATION
என ஆங்கிலத்தில் முழுமையாக இடம்பெற்றிருந்த வாக்கியமே
கேரள அரசுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற உதவியுள்ளது.

பொழுதுபோக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அறிவுசார்
பிரச்சினையைத் தீர்த்து வைக்க உதவியுள்ளது. சினிமா எத்தகைய
வலிமையான ஊடகம் என்பதை இச்சம்பவம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Latest news