கடந்த ஜூலை 27 பிரபல மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜெயபால், கொலை நடப்பதற்கு முன்பே கவினை மிரட்டியது அம்பலமாகியுள்ளது. ஜெயபாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது,CB-CID தரப்பில் இந்த அதிர்ச்சித் தகவல் SC/ST சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கவின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரான கே. ஜெயபால் (29), தனது காதலி சுபாஷினியுடனான உறவைத் துண்டிக்குமாறு கவினை மிரட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் CBI-CID காவல்துறை, இந்தத் தகவலை SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தெரிவித்தது.
ஜெயபாலின் ஜாமீன் மனு நீதிபதி எஸ். ஹேமா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “ஜெயபாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைக்கவும், விசாரணைக்குத் தடையாகவும் இருக்கக்கூடும்” எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கொலை செய்வதற்கு முன்பே “கவனுக்கும், ஜெயபாலின் உறவினரான சுபாஷினிக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் ஜெயபாலுக்குத் தெரிந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கயத்தாறுக்கு அழைத்து, சுபாஷினியுடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு கவினை ஜெயபால் மிரட்டியுள்ளார். மேலும், கடந்த ஜனவரி 25 அன்று, கவினுடன் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளதும் அழைப்பு விவரப் பதிவுகள் (CDR) மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.”
“இந்த வழக்கில் ஜெயபாலின் ஈடுபாடு, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஏற்கெனவே கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரின் வாக்குமூலங்கள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.”
மேலும், சிபி-சிஐடி தரப்பில், “ஜூலை 27 அன்று கவின் கொலை செய்யப்பட்ட பிறகு, முக்கிய குற்றவாளியான சுர்ஜித் தப்பிச் செல்ல ஜெயபால் உதவியுள்ளார். சுர்ஜித்தின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை எரிப்பதற்கும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை மாற்றுவதற்கும் ஜெயபால் உடந்தையாக இருந்துள்ளார்” என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் (FIR) பெயர் சேர்க்கப்பட்டுள்ள சுர்ஜித்தின் தாயார் எஸ். கிருஷ்ணகுமாரி என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என்றும் சிபி-சிஐடி நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.
இந்த நிலையில், கவின் குடும்பத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி பி. மோகன் வாதிடுகையில், “எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இது ஆதிக்க சாதியினரின் தலையீடு உள்ள ஒரு முக்கிய வழக்கு. உள்ளூர் காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இத்தகைய சூழலில் ஜெயபாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் நிச்சயமாக இந்த வழக்கின் விசாரணையைப் பாதிப்பார்,” என்று கடுமையாக வாதிட்டார். இந்த வழக்கில் வெளியே வராத உண்மைகளை நோண்டி நொங்கெடுத்து வருகிறது CBI-CID