கரூர் துயர சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி செந்தில்குமார் நேற்று பல்வேறு அதிரடியாக உத்தரவிட்டார்.
அதில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். அது போல த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதி செந்தில் குமார் வெளியிட்ட உத்தரவில், “ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவுகள் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், வக்கீல் தரப்பினரையும் அழைத்து இருந்தார். அவர்களுடன் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினார். ஐகோர்ட் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் எந்தெந்த விஷயங்களில் பதில் அளிப்பது என்றும் நீண்ட நேரம் ஆய்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ள உத்தரவுகளின்படி செயல்படும் பட்சத்தில் அது த.வெ.க.வுக்கு எதிராக அமைந்து விடும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் நெரிசல் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட வல்லுனர்களுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அது கட்சி வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் உதவியாக இருக்குமா? என்றும் கேட்டறிந்தார்.
இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சுப்ரீம் கோர்டை அணுகுவது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார். ஓரிரு நாளில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டால் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.