கரூர் நெரிசல் விபத்து வழக்கில் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு, அவர் தரப்பில் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அதை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது. இந்த சம்பவத்தையடுத்து, புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுக்கள், மதுரை அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. பின்னர், புஸ்ஸி ஆனந்த் மீண்டும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், கரூர் நெரிசல் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், புஸ்ஸி ஆனந்தின் இரண்டாவது முன் ஜாமீன் மனு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கரூர் காவல் ஆய்வாளர் எதிர்மனுதாரராக குறிப்பிடப்பட்டிருப்பதால், மனுவைத் திரும்பப் பெற விருப்பம் தெரிவித்தார்.
இதனை ஏற்று, மனு வாபஸ் பெற்றதாக பதிவு செய்து, மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேசமயம், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த, கரூர் துயரச் சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரும் மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், புதிய உத்தரவு வழங்க முடியாது எனக் கூறி அந்த மனுவையும் முடித்துவைத்தது.
